ஆந்திர கடற்கரையில் கரை ஒதுங்கிய 8 மீனவர்களின் உடல்கள், சென்னை காசிமேட்டையைச் சேர்ந்த மீனவர்களாக இருக்கலாம் என சந்தேகம். மூன்று உடல்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், மீதமுள்ள உடல்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் - M. மீரா
கடந்த அக்டோபர் 29-ம் தேதி காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 9 மீனவர்கள் விசைப்படகில் கடலுக்குச் சென்றுள்ளனர். ஆந்திராவின் வடக்குப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்கள், வானிலை மோசமடைந்ததால் நிசாம்பட்டினம் விரிகுடா பகுதியில் மற்றொரு மீன்பிடிப் படகுடன் சேர்ந்து தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை முரசு புயல் தாக்கியதால் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பில் இரண்டு படகுகளும் இழுத்துச் செல்லப்பட்டன. இதில் மற்றொரு படகு சுமார் 20 கடல் மைல் தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடலோர காவல்படைக்கு தகவல் அளிக்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில்ஆந்திர மாநிலம் கொத்தபட்டணம் கடற்கரையில் எட்டு மீனவர்களின் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. நவம்பர் 2-ஆம் தேதி ஆந்திர கடலில் இருந்த சென்னை காசிமேட்டைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் காணாமல் போன நிலையில், 'அவர்களின் உடல்கள் தானா?' என்பதைக் கண்டறிய குழு ஒன்று சென்றுள்ளதாக, மீன்வளத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்
இதனைத் தொடர்ந்து 3 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் அளித்திருக்கிறார் முதல்வர்.