பாஜக முகநூல்
தமிழ்நாடு

தமிழக பாஜகவில் தலைவர் பதவிக்கான முதல் தேர்தல்; விதிமுறைகளால் எழுந்த சிக்கல்!

பாஜகவில் தலைமை தேர்தல்: விதிமுறைகளால் மூத்த தலைவர்களுக்கு சிக்கல்.

PT WEB

தமிழக பாஜகவில் தலைவர் பதவிக்கு முதல்முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், அதில் இடம்பெற்றுள்ள விதிமுறைகளால் பல மூத்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்ற பேச்சு எழுந்த நிலையில், அதற்கு நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோருக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த சூழலில், தமிழக பாஜகவில் தலைவர் பதவிக்கு முதல்முறையாக தேர்தல் நடைபெறவுள்ளது. தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விரும்புவோர், இன்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவர்கள் குறைந்தது 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலை, புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என கருதப்பட்ட நயினார் நாகேந்தின் உள்ளிட்டோர் கட்சியில் சேர்ந்து இன்னும் 10 ஆண்டுகள் முழுமை அடையவில்லை என்பதால், அவர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் மூத்த பெண் நிர்வாகிகளான தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.