விருதுநகர்  முகநூல்
தமிழ்நாடு

விருதுநகர் | பட்டாசு ஆலை விபத்து - பரிதாபமாக உயிரிழந்த 6 பேர்; நிதி உதவி அறிவித்த முதல்வர்

இன்று காலையில் 9.30 மணி வெடிமருந்து கலக்கும் அறையில் மருந்து கலக்கும் பொழுது உராய்வு ஏற்பட்டு மருந்து கலவையாளர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு நிதியுதவி அறிவித்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

PT WEB

செய்தியாளர்: A. மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டூர் - அருப்புக்கோட்டை சாலையில் உள்ள பொம்மையாபுரம் சிவகாசி ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான பெசோ உரிமம் பெற்ற 84 அறைகள் கொண்ட பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இங்கு 84 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இங்கு இன்று காலையில் 9.30 மணி வெடிமருந்து கலக்கும் அறையில் மருந்து கலக்கும் பொழுது உராய்வு ஏற்பட்டு மருந்து கலவையாளர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்த ஆறு நபர்களின் உடல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் மருந்து கலப்பதற்கு எடை போடும் பொழுது உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து இந்த வெடி விபத்தில் வேல்முருகன் (குருந்தமடம்), நாகராஜ் (செட்டிக்குறிச்சி), கண்ணன் (வீரார்பட்டி), காமராஜ் (குருந்தமடம்), மீனாட்சி சுந்தரம் (அருப்புக்கோட்டை),சிவக்குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

ஆவுடையாபுரத்தை சேர்ந்த முகமது சுதின் காயமடைந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சட்ட விரோதமாக இயங்கி வந்த இந்த பட்டாசு ஆலை உள் குத்தகைக்கு விடப்பட்டு கடந்த 3 மாதங்களாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தலைமறைவான பட்டாசு ஆலையின் போர் மேன் பாண்டியராஜ் (23) பிரகாஷ் (27) ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்ச ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தன் அறிவிப்பில் முதல்வர், “இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிடப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.