‘ஒரு வருடத்தில் ரூ 40 லட்சம் வருமானம்’- பானிபூரி கடைக்காரருக்கு பறந்த TNGST நோட்டீஸ்.. பின்னணி என்ன?
தமிழ்நாட்டில் பானிபூரி கடை வைத்துள்ள ஒரு வடமாநில தொழிலாளிக்கு, தமிழ்நாடு ஜிஎஸ்டி சார்பில் நோட்டீஸ் ஒன்று பறந்துள்ளது. அந்த நோட்டீஸ், இப்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. காரணம், 2023 - 24 ம் ஆண்டில் மட்டும் இவரது வங்கிக்கணக்கில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் மட்டுமே ரூ 40 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளதாம்.
டிசம்பர் 17, 2024 தேதியிட்ட அந்த நோட்டீஸில், ‘தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி பிரிவு 70-ன் கீழ், நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பியுங்கள்’ என அந்த தொழிலாளிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரேசர் பே மற்றும் ஃபோன் பே ஆகியவற்றின்கீழ் இந்த பரிவர்த்தனைகள் நிகழ்ந்துள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், வரம்பை மீறிய தொகை பரிமாற்றம் நிகழ்ந்த பின்னரும் ஜிஎஸ்டி பதிவு இல்லாமல் இருப்பது சட்டப்படி குற்றம் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த நோட்டீஸ் எந்தளவுக்கு உண்மையானது, அந்த பானிபூரி கடைக்காரர் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் கடை வைத்திருக்கிறார் என்பதுபற்றி எந்த விவரமும் அந்த நோட்டீஸில் இல்லை.
ஆகவே, இது எந்தளவுக்கு உண்மையான தகவல் என்பதும் இல்லை. தற்போது, அந்த நோட்டீஸ் வைரலாகி வருவதால், இணையத்தில் பலரும் இதை விமர்சித்து வருகின்றனர்.