பட்டிமன்ற ராஜா வீடியோ வெளியிட்டு விளக்கம் web
தமிழ்நாடு

“அது மறுப்பு வீடியோ அல்ல மழுப்பல் வீடியோ..” பட்டிமன்றம் ராஜாவை மீண்டும் குற்றச்சாட்டிய பெண் சகோதரர்!

அமெரிக்காவில் உணவு வழங்கிய பெண்ணிடம் சாதி என்னவென்று பட்டிமன்றம் ராஜா கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கு வீடியோ வெளியிட்டு மறுப்பு தெரிவித்தார். ஆனால் அது ஒரு தர்க்கமில்லாத மழுப்பல் வீடியோ என பெண் சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார்..

Rishan Vengai

பட்டிமன்றம் ராஜா, அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் உணவு கொடுத்த பெண்ணின் சாதி குறித்து கேள்வி எழுப்பியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், தன் பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், உணவு கொடுப்பவர்களின் சாதியை கேட்கும் அளவுக்கு சின்ன புத்தி இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அப்பெண்ணின் சகோதரர் பட்டிமன்றம் ராஜாவின் வீடியோ மழுப்பல் வீடியோ என்று மீண்டும் விமர்சித்துள்ளார்.

தொலைக்காட்சி பட்டிமன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ராஜா, திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் நடைபெற்ற நிகழ்வின்போது, உணவு கொடுத்த பெண்ணின் சாதி குறித்து கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

பட்டிமன்றம் ராஜா

இவ்விவகாரம் சர்ச்சையான நிலையில், ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில், தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். உணவு கொடுப்பவர்களிடம் சாதியை கேட்கும் அளவுக்கு தனக்கு சின்ன புத்தி இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

அது ஒரு மழுப்பல் வீடியோ..

தன் மீது எந்த தவறும் இல்லை என மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கும் பட்டிமன்றம் ராஜா, “அந்த பெண் தன்னுடைய ஊரை காரைக்குடினு சொன்னாங்க, அப்போது நான் அவங்களிடம் செட்டிநாடா என்று தான் கேட்ட நியாபகம் இருக்கிறது, செட்டியார் என்று கேட்கவில்லை. இவ்வளவு சுவையா செட்டிநாடு உணவு இருக்கே என்று தான் கேட்ட நியாபகம் இருக்கு. அவங்க யாரு? என்ன சாதி? என்றெல்லாம் யோசிக்கிற அளவு எனக்கு சின்ன புத்தி இல்ல. என்னை அறிந்தவர்களுக்கும், என்னோடு பயணிக்கிறவர்களுக்கும் என்னை நன்றாக தெரியும்” என வீடியோ வெளியிட்டிருந்தார்.

ஆனால் ராஜாவின் வீடியோ குறித்து மீண்டும் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கும் அப்பெண்ணின் சகோதரர், “ராஜாவின் மறுப்பு வீடியோவை பார்த்தேன். அது ஒரு தர்க்கம் இல்லாத மழுப்பல் வீடியோ. அதற்கு நான் ஒரு மறுப்பு தெரிவித்து இன்னும் எழுதுவதை விரும்பவில்லை. எனது தங்கைக்கு அங்கு பல்வேறு ரூபத்தில் அழுத்தம் கூடுகிறது. தங்கையின் கணவர் உறுதியாக இருக்கும் அளவிற்கு தங்கை இல்லை. மாதொருபாகன் நாவலுக்கு எழுத்தாளர் பெருமாள்முருகன் எதிர்கொண்ட நெருக்கடியை நினைத்துப் பார்க்கிறேன். அவர் இறுதியில் எந்த சூழலுக்கு தள்ளப்பட்டாரோ அதை நோக்கி தான் என் தங்கை தள்ளப்படுகிறார். அதனால் இதனை விட்டுவிடவே நினைக்கின்றேன்.

பெண்களுக்கு பாடத்திட்ட கல்விகள் மட்டும் போதாது. முரண்பாடுகள் கொண்ட இந்த சமூகத்தை எதிர்கொள்ளும் சமூக கல்வியும், சமூகப் பயிற்சியும் வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.