people affected in nepal flood pti
தமிழ்நாடு

நேபாளத்தில் சிக்கிய 49 தமிழர்களின் நிலை தெரியவில்லை.. உறவினர்கள் சாலை மறியல்!

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பால் அங்கே சுற்றுலா சென்ற 49 தமிழர்களின் நிலை என்ன ஆனது என்ற தகவல் தெரியாததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Rishan Vengai

நேபாளத்தில் பனிப்பாறை உடைப்பு காரணமாக போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட பேரழிவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்ற 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கினர். பலர் மீட்கப்பட்டாலும், 49 பேரின் நிலை இதுவரை தெரியவில்லை. இவர்களின் உறவினர்கள் செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்.

நேபாளத்தில் கடந்த 26ஆம் தேதி பனிப்பாறை உடைப்பு காரணமாக ஏற்பட்ட பேரழிவு உலகையே உலுக்கியுள்ளது. நேபாள் - திபெத் எல்லையில் அமைந்துள்ள இமயமலை பகுதியில் இருந்த பனிப்பாறை தீடிரென உடைந்து அதில் இருந்த ஏராளமான நீர் ’போதே கோஷி (Bhote Koshi)’ ஆற்றில் பாய்ந்து வந்ததால் நேபாளத்தில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது.

சில வினாடிகளில் 9 மீட்டர் வரை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து, சுனாமி வேகத்தில் வந்த வெள்ளத்தால் நீர்மின் கட்டமைப்புகள், வீடுகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் அடித்து செல்லப்பட்டனர். இந்த பேரழிவில் இதுவரை 700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போன ஆயிரக்கணக்கானோரை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.

நேபாளம் வெள்ளம்

இந்நிலையில் நேபாள வெள்ளத்தில் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கிய நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பலர் பத்திரமாக மீட்கப்பட்டு தாயகம் திரும்பிய நிலையில், இன்னும் 49 தமிழர்களின் நிலைமை என்ன ஆனது என்ற நிலை தெரியாமல் இருந்துவருகிறது.

இந்தசூழலில் நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 49 பயணிகளின் நிலை குறித்துத் தகவல் கிடைக்காததால், உறவினர்கள் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், காணாமல் போன பயணிகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.