மதுரையில் விவசாயியின் தொலைந்துபோன 25 சவரன் நகைகளை தூய்மைப்பணியாளர் மீட்டெடுத்துக்கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி 75ஆவது வார்டுக்கு உட்பட்ட சுந்தரராஜபுரம் நியு ரைஸ்மில் 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கம் (52), விவசாயி ஆன இவர் தனது மகளின் திருமணம் தை மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்காக தான் வைத்திருந்த 25 பவுன் நகையை தனது வீட்டில் இருந்த தலையணைக்குள் பத்திரப்படுத்தி வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் தனது மகளின் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது வீட்டில் இருந்து தலையணை, துணிகள் உள்ளிட்ட பழைய பொருட்களை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை தொட்டியில் போட்டுசென்றுள்ளார்.
இதையடுத்து தலையணையில் 25 பவுன் தங்க நகையை வைத்திருந்த்து நினைவுக்கு வந்துள்ளது. இதனால் பதறியடித்த தங்கம் உடனடியாக அவரது வீட்டின் அருகே இருந்த குப்பை தொட்டியில் தேடியுள்ளார். ஆனால் தங்க நகை கிடைக்கவில்லை..
இந்தநிலையில் உடனடியாக 75ஆவது வார்டு மேற்பார்வையாளர் மருதுபாண்டியனை தொடர்புகொண்டு தனது மகளின் திருமணத்திற்காக தலையணைக்குள் நகையை வைத்திருந்த்தாகவும், அதனை ஞாபக மறதியில் குப்பை தொட்டிக்குள் வீசி சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து மேற்பார்வையாளர் அந்த பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களிடம் கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த மீனாட்சி என்ற தூய்மை பணியாளர் குப்பை தொட்டியில் தேடிப்பார்த்தபோது அங்கு குப்பை தொட்டிக்குள் தலையணை கிடப்பதை பார்த்து பின்னர் தலையணை பிரித்து அதற்குள் 25 பவுன் நகை இருப்பதை உறுதிசெய்துள்ளார்..
பின்னர் நகையின் உரிமையாளர் தங்கத்தை தொடர்புகொண்ட மேற்பார்வையாளர் மருதுபாண்டியன் மற்றும் தூய்மை பணியாளர் மீனாட்சி ஆகிய இருவரும் 25 பவுன் தங்க நகைகளை ஒப்படைத்துள்ளனர். இதனை பெற்றுக்கொண்ட நகை உரிமையாளர் தங்கம் தனது மகளின் திருமணத்திற்க்காக வாழ்நாள் முழுவதும் சம்பாதித்து சேர்த்துவைத்த 25 பவுன் நகையை மீட்டு தந்த மேற்பார்வையாளர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். தூய்மைப் பணியாளரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது..