தமிழகத்தில் கடந்த 2015 முதல் 2025 வரை நடைபெற்ற சாதிய வன்கொடுமை சம்பவங்கள் மற்றும் அவற்றின் மீதான அரசின் நடவடிக்கைகள் குறித்து எவிடென்ஸ் அமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் திரட்டிய தரவுகளின் அடிப்படையில் வெளியிட்டுள்ள ஆய்வு பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
ஆய்வின்படி, தமிழகத்தின் 32 மாவட்டங்களில் கடந்த 11 ஆண்டுகளில் மொத்தம் 11,117 சாதிய வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக 2024ஆம் ஆண்டு 1,103 ஆக இருந்த சம்பவங்கள், 2025ஆம் ஆண்டு 1,560 ஆக உயர்ந்து, ஓராண்டில் மட்டும் 29 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். வன்கொடுமை சம்பவங்கள் அதிகம் பதிவான மாவட்டங்களில் மதுரை மாவட்டம் (மாநகரம் உட்பட) 1,322 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து சிவகங்கை, விழுப்புரம், புதுக்கோட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
மொத்த வழக்குகளில் வெறும் 406 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், இது மொத்தத்தின் 3.6 சதவீதம் மட்டுமே எனவும் ஆய்வு தெரிவிக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 11 சதவீத தண்டனை விகிதம் பதிவாகியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் 3,611 குற்றவாளிகள் நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த விடுதலை தீர்ப்புகளை எதிர்த்து தமிழக அரசு வெறும் 13 வழக்குகளில் மட்டுமே மேல்முறையீடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சுமார் 2,249 வழக்குகள் உண்மைக்கு புறம்பானவை எனக் கூறி அதிகாரிகளால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
167 வழக்குகள் இன்னும் காவல் நிலைய விசாரணையிலேயே உள்ளன. இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 78 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 3,810 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்ட அதிகாரிகள் வன்கொடுமை தொடர்பான தகவல்களை வழங்க மறுத்துள்ளதாக எவிடென்ஸ் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இது வெளிப்படைத்தன்மைக்கு எதிரானது எனவும் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் வன்கொடுமை வழக்குகளுக்கென தனிச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும், தண்டனை விகிதம் குறைவாக இருப்பதற்கான காரணங்களை ஆராய முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும், மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளை வன்கொடுமை மாவட்டங்கள் என அறிவிக்க வேண்டும் என எவிடென்ஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மேலும், கொலை மற்றும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும், ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழகத்தில் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.