2021 முதல் 2026 வரையில் திமுக ஆட்சிக் காலக்கட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எ.வ. வேலு, நெடுஞ்சாலைப் பணிகளில் 3.23 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையெடுத்து, கடந்த ஜூன் 25 அவரது இல்லம் உட்பட எ.வ.வேலுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது லஞ்ச ஒழிப்புத்துறை. அப்போது, 40 லட்சம் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரை விசாரணைக்கு ஆஜராக லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், சிகிச்சைக்காக எ.வ.வேலு சிங்கப்பூர் சென்றதால், விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை.
இந்தசூழலில் தான், சமீபத்தில் கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்குப் பயந்து சிங்கப்பூரில் ஒளிந்துகொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை மறைமுகமாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், இன்று சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு திரும்பியுள்ள முன்னாள் அமைச்சரும் திமுக கொறடாவுமான எ.வ.வேலு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதல்வர் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
எ.வ. வேலு பேசுகையில், 2016-ல் இருந்து சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றேன். கடைசியாக, 29-9-2023-ல் அம்மருவத்துவமனையில் சிகிச்சைப் பெற்று இருக்கிறேன். இந்தசூழலில் தான், தற்போது சிகிச்சைப் பெற்றிருக்கிறேன். எனக்கு பல பிரச்னைகள் உள்ளது. நியூரோ, இதய பிரச்சினை மற்றும் அலர்ஜிக்கு எனக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் ஊசி போடப்பட்டது. ஒன்பது நாட்கள் அதற்கு நாளாகிவிட்டது. மருத்துவ சிகிச்சை பெற்ற அனைத்து ஆதாரங்களும் என்னிடத்தில் உள்ளது.
கடந்த 3-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக எனக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நான் சென்னை திரும்ப 10 நாட்களாகும் என கடிதம் வாயிலாக தெரிவித்துவிட்டேன். ஆனால் 9-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் தேதிக்கு பிறகு எந்த தேதியில் அழைத்தாலும் நான் விசாரணைக்கு வர இருப்பதாக தெரிவித்துவிட்டேன். நான் ஓடவில்லை; ஒளியவில்லை; பதுங்கவில்லை; தி.மு.க. எங்களை அப்படி வளர்க்கவில்லை. வருகிற 15-ம் தேதி விசாரணைக்காக நிச்சயமாக ஆஜராக இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.