\
Thirumavalavan's Indirect Attack on DMK Over VCK Row
திருமாவளவன்Pt web

விசிகவை பலவீனப்படுத்தும் நோக்கில்.. பனையூர் பாபு திமுகவில் இணைவு.. திருமாவளவன் விமர்சனம்!!

விசிகவை எங்களாலும்(திமுகவால்) பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், ஒருவரை இணைத்துக் கொண்டார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து 8 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வென்றது விசிக. முன்னதாக, தேர்தலில் ஏற்கனவே எம்.எல்.ஏ-க்களாக இருந்த ஆளூர் ஷா நவாஸ் மற்றும் பனையூர் பாபு ஆகியோருக்கு போட்டியிட விசிகவில் சீட் கொடுக்கபடாததால் அவர்கள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. அதேசமயம், இவர்கள் இருவரும் திமுகவுடன் அதிக நெருக்கமாக இருந்ததே சீட் மறுக்கப்பட காரணம் என பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இந்தசூழலில் தான், விசிக இடம்பெற்ற திமுக கூட்டணி தோல்வியைத் தழுவியிருக்கும் நிலையில், விசிக தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்திருப்பதுடன் அமைச்சரவையிலும் இடம்பெற்றிருக்கிறது.

ஸ்டாலின் - பனையூர் பாபு
ஸ்டாலின் - பனையூர் பாபுPt web

இதைக் காரணமாகக் கொண்டு தேர்தலில் விசிகவில் இருந்து சீட் கொடுக்கப்படாத பனையூர் பாபு திமுகவில் இணைந்திருக்கிறார். இதையடுத்து, இத்தனை ஆண்டுகாலம் கூட்டணியில் இருந்த ஒரு கட்சியின் நிர்வாகியை தங்களது கட்சியில் இணைத்துக் கொண்டதாக பலரும் விமர்சனம் செய்தனர். அதேபோல, ஆளூர் ஷா நவாஸும் திமுகவில் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. எனினும், சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்த ஆளூர் ஷா நவாஸ், தான் விசிகவில் அதிருப்தியுடன் இருப்பதாகவும், மாற்றுக் கட்சியில் இணைவதாக இருப்பதாகவும் கூறப்பட்டது யூகங்கள் என தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்தசூழலில் தான், விசிகவை தங்களாலும் பலவீனப்படுத்தும் நோக்கில் ஒருவரை இணைத்துக் கொண்டதாவும், அதேசமயம், அவரைத் தவிர வேறு யாரும் செல்லவில்லை எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் விசிக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 2021 மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அரூர் தொகுதியைத் தரக்கோரி திமுகவிடன் கடுமையாக வலியுறுத்தியதாகவும், இறுதியில் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மனம் கசந்து அரூருக்கு பதில் அரக்கோணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்
திருமாவளவன்pt web

தொடர்ந்து பேசிய அவர், "நான் ஒருபோதும் கட்சியிலிருந்து யாரையும் வெளியேற்ற வேண்டும் என்று எண்ணியதில்லை. சிலர் விசிகவை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்ற நோக்கில், அவர் வெளியே செல்கிறார்; இவர் செல்கிறார் என்றெல்லாம் பேசி கனவு கண்டார்கள். அது எதுவும் நடக்கவில்லை. ஒரு தம்பி மட்டும் தான் வெளியே சென்றார். வேறு யாரும் அவரோடு செல்லவில்லை

ஒருவர் நம் கட்சிக்கு வருகிறார் என்று சொன்னால், அவரிடம் என்ன சொல்லியிருக்க வேண்டும். எங்களுடன் திருமாவளவன் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றியுள்ளார். எங்களுக்கு திருமாவளவன் நம்பகத்தன்மை கொண்டவர். அந்த இயக்கத்தை பலவீனப்படுத்த மாட்டோம். நீங்கள் எங்கள் கட்சிக்கு வேண்டாம். வேறு ஏதாவது கட்சிக்கு செல்லுங்கள் என்று சொல்லியிருக்கலாம். ஆனால், மீண்டும் விசிகவோட உறவு வேண்டாம் என்ற நோக்கில்,  விசிகவை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில் கட்சியில் இணைத்துக் கொண்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Thirumavalavan's Indirect Attack on DMK Over VCK Row
யார் கூட்டுக் களவாணிகள்? 'பேசக்கூடாத மொழியில் முதல்வர் பேசுவது வெட்கக்கேடு' - அதிமுக பதிலடி
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com