செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஓட்டுநர் கிரீஸ் கந்தராஜா (48) கடந்த 27ம் தேதி டேங்கர் லாரியில் ஹைதராபாத்தில் இருந்து சாயப்பட்டறை கழிவுநீரை சுத்தம் செய்ய பயன்படுத்தும் கெமிக்கலை ஏற்றிக் கொண்டு நேற்று திருப்பூரில் உள்ள இரு சாயப்பட்டறையில் இறக்கப்பட்டது. பின்னர் இன்று, சித்தோடு அருகே கோணவாய்க்காலில் செயல்பட்டு வரும் சர்வீஸ் ஸ்டேஷனில் டேங்கர் லாரியை செல்லப்பன் (52), யுகானந்தன் (50) மற்றும் சந்திரன் (62) ஆகியோர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது மூவரும் திடீரென மயக்கமடைந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் மூவரையும் மீட்கப்பட்டனர். இதில், யுகானந்தன் (50) மற்றும் சந்திரன் (62) ஆகியோர் பவானி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். செல்லப்பன் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து உயிரிழந்த இருவரின் உடலையும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சித்தோடு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.