9 பேர் மருத்துவமனையில் அனுமதி pt desk
தமிழ்நாடு

ஈரோடு | கோயிலில் பொங்கல் வைத்தபோது நேர்ந்த விபரீதம் - 9 பேர் மருத்துவமனையில் அனுமதி

கோபிசெட்டிபாளையம் அருகே கோயிலில் பொங்கல் வைத்தபோது தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 8 வயது சிறுவன் உட்பட 9 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: சுப்ரமணியம்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் கணபதி பாளையத்தில் சுங்கத்து கருப்பராயன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வாணிப்புத்தூரைச் சேர்ந்த ஞானசேகரன், மாதேஸ்வரி உள்ளிட்ட பலர் கிடாய் வெட்டி பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது எழுந்த புகை காரணமாக அங்கிருந்த மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் கலைந்துள்ளது.

இதையடுத்து பொங்கல் வைத்துக் கொண்டிருந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஞானசேகரன், மாதேஸ்வரி, 8 வயது சிறுவன் தர்ஷன், சமையல் செய்து கொண்டிருந்த சத்தியமங்கலத்தைச் சேர்ந்த காந்தி, நஞ்சுண்டன், ராஜன் உள்ளிட்ட 9 பேரை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியுள்ளது. இதில், காந்தி, நஞ்சுண்டன், தர்ஷன் உள்ளிட்ட ஆறு பேர் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மூன்று பேர் காசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயிலில் பொங்கல் வைத்தபோது தேனீக்கள் கொட்டியதில் 9 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.