மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா - கையில் குழந்தைகளுடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
செய்தியாளர்: காளிராஜன் த
திண்டுக்கல் மாவட்டத்தில் 98 பட்டிகளுக்கு தாய் கிராமமான மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள காளியம்மன், பகவதியம்மன், லட்சுமி விநாயகர் கோயிலில் வருடந்தோறும் வைகாசி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு 381வது வைகாசி திருவிழா கடந்த 13ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூக்குழி இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை துவங்கியது. இதில், காப்புக்கட்டிய பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறும் வகையில் கையில் குழந்தைகளோடும், ,காளியம்மன், பகவதி அம்மன் வேடமிட்டு 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இந்நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து வரும் 23ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும், 24ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. இதையடுத்து காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா நிறைவடையும்.