மனம் திறந்த பேச்சு.... எந்த சர்ச்சைக்கும் அஞ்சாத விமர்சனங்கள்... வெற்றிச் சூத்திரத்தை வகுக்க வல்ல ஆற்றல் என அரை நூற்றாண்டுக்கும் மேல் தனித்துவமான பாணியில் அரசியலில் வீறு நடை போட்டவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்... பகுத்தறிவு பேராசான் பெரியாரின் பேரன்...
திமுகவின் தொடக்க காலகட்டத்தில் அக்கட்சியின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட ஈ. வெ.கி சம்பத்தின் மகன்... இவ்வாறான அரசியல் பின்புலம்.... மறுபுறம் அதிரடியான பேச்சு... எதிர்க்களத்தில் இருக்கும் ஆளுமைகளை எந்த தளத்துக்கும் சென்று விமர்சிக்கும் போக்கு.
அரசியல் களத்தில் தம்மை பரபரப்பாக வைத்திருந்த இளங்கோவன் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருமுறையும், செயல் தலைவராக ஒருமுறையும் இருந்தவர். இப்படி அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல் உலகின் பேசுபொருளாக இருந்தவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
வடக்கில் காங்கிரஸ் கட்சிக்கு மூத்த தலைவர் திக் விஜய்சிங் சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர் பெற்றார். அவ்வாறே அரசியல் ஆட்டம் காட்டியதால் தென்னாட்டு திக் விஜய் சிங்காகவே ஒருகாலகட்டத்தில் அவர் பார்க்கப்பட்டார். தாம் மாநிலத் தலைவராக இருந்த போது நெல்லை கண்ணன், திருச்சி வேலுச்சாமி ஆகியோருடன் இணைந்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
முதன்முறையாக அவர் சட்டப்பேரவைக்குள் நுழைந்தது 1984- ஆம் ஆண்டு . ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட அவர், வெற்றிக்கனியை பறித்தார். 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் கோவிந்தராஜனை தோற்கடித்தார். இதனையடுத்து மன்மோகன் சிங் அமைச்சரவையிலும் ஜவுளி மற்றும் வர்த்தக துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
இதன்பின்னர் 2009 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் போட்டியிட்ட போது வெற்றி கைகூடவில்லை. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒரே வேட்பாளர் இளங்கோவன் மட்டுமே. 2021- ஆம் ஆண்டு இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெ.ரா ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிக் கனியை ஈட்டினார்.
ஆனால், காலத்தின் சோகமாக திருமகன் உயிரிழக்க, ஈரோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. மகனின் இடத்தை நிரப்ப தந்தை களமாட வேண்டிய சூழல் இளங்கோவனுக்கு ஏற்பட்டது. கட்சித் தலைமைக்கு கட்டுண்டு களம் கண்ட இளங்கோவன் 50-ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை ஈட்டினார். 34 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அவரது குரல் சட்டமன்றத்தில் ஒலித்தது.