”காங்கிரஸுக்கு பேரிழப்பு.." கலங்கியபடி பேசிய செல்வப்பெருந்தகை
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
இந்நிலையில், இவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல்!
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவிக்கையில், “ அவரது இழப்பு மிகப்பெரிய இழப்பு. காங்கிரஸ் பேரியக்கத்தினுடைய மூச்சாகவும் நாடித் துடிப்பாகவும் விளங்கி இருந்தவர்தான் அண்ணன். அவரை அனைவரும் தன்மான தலைவர் என்று பாசத்தோடு அழைப்பார்கள்.
அப்படிப்பட்ட ஒரு தலைவரை காங்கிரஸ் பேரியக்கம் இழந்திருக்கிறது. எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். யாருக்கும் எந்தவித சங்கடமும் இல்லாமல், அச்சப்படாமல் தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்கக்கூடிய தலைவராக இருந்தவர். அவரின் இழப்பு என்பது குடும்பத்தாருக்கும் காங்கிரஸ் பேரியக்கத்தை சார்ந்தவர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு. குறிப்பாக, எதையும் என்னிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளக்கூடியவர். அறிவுரை வழங்கக்கூடியவர். ஒளிவுமறைவில்லாமல் பேச கூடிய ஒரு வெள்ளை உள்ளம் படைத்த தலைவராகத்தான் நாங்கள் அவரைப் பார்த்தோம்.
அன்பும் சரி அரவணைப்பும் சரி அதேபோன்று விமர்சனம் செய்வதும் சரி வெளிப்படையாக இருக்கும் அப்படிப்பட்ட ஒரு சிலரை பார்ப்பது மிகவும் அரிது. அப்படிப்பட்ட தலைவராகத்தான் தமிழக காங்கிரஸின் ஒரு மாபெரும் தலைவராக விளங்கி இருந்தார். அவரை இழந்து வாடும் எங்களுடைய காங்கிரஸ் பேரியக்கத் தோழர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடைய மூத்த மகன் இறந்தபொழுதே அவர் மனதளவில் மிகவும் பலவீனம் அடைந்து காணப்பட்டார். சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு சட்டப்பேரவைக்கு செல்ல வேண்டும் என்று அவருக்கு விருப்பமும் இல்லை.
ஆனால், எல்லா நண்பர்களூம், காங்கிரஸ் பேரியக்க தலைவர்கள் கூட்டணி கட்சி தலைவர்களும் கேட்டுக்கொண்டதன் பெயரிலே அவர் போட்டியிட்டார். மேலும், இனிமேல் நான் போட்டியிடவே மாட்டேன் என்றும் இளைஞர்களுக்கு வழியிட வேண்டும் என்றார்.
அவருடைய நேர்மை அவருடைய துணிச்சல் கடைசி வரை இருந்தது. மருத்துவமனையில் இருக்கும் பொழுது கூட திரும்பி வந்து விடுவோம் என்று அவர் மிகவும் மன உறுதியோடுதான் இருந்திருக்கிறார். ஆனால், அவருடைய உயிரிழப்பை தடுக்க முடியாமல் போய்விட்டது.” என்று தெரிவித்துள்ளார்.