திமுக வேட்பாளர்  pt desk
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ‘இந்தியும் தமிழும் எங்க உயிர்; Sorry தவறா சொல்லிட்டேன்..’- DMK வேட்பாளர்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் இந்தியில் நோட்டீஸ் அச்சடித்து வழங்கவில்லை என திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகில் அமைந்துள்ள திமுக தேர்தல் பணிமனையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், திமுக சார்பில் இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்புக்காக இந்தியில் விநியோகிக்கப்பட்ட நோட்டீஸ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசிய அவர், “திமுகவின் கொள்கை இருமொழி கொள்கைதான். அந்த இரு மொழிகள், ஆங்கிலமும் தமிழும்தான். திமுக எந்த காலகட்டத்திலும் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பைதான் எதிர்க்கிறோம்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக சார்பில் இந்தியில் விநியோகிக்கப்பட்ட நோட்டீஸ்

லக்கி கோத்தாரி என்பவர் வட இந்தியாவை சேர்ந்தவர். அவர் பல வருடங்களாக திமுகவில் இணைந்து பயணித்து வருகிறார். அவர் வட இந்தியர்கள் தொழில் உரிமையாளர்களை அழைத்துச் சென்று நோட்டீஸ் கொடுத்து வாக்கு சேகரித்தார். அப்போது தமிழில் நோட்டீஸ் கொடுத்தால் எப்படி படிப்பது என்று சிலர் கேட்டுள்ளார்கள். இதனால் லக்கி கோத்தாரி, தனிப்பட்ட முறையில் இந்தியில் நோட்டீஸ் அச்சடித்து வழங்கி உள்ளார்.

இதுபோன்ற வட இந்தியர்கள் வாழும் பகுதிக்கு இந்தி நோட்டீஸ் கொடுப்பது வாடிக்கையான ஒன்றுதான். அதனால் இதை பெரிதாக பேசவில்லை. இந்தியில் திமுக சார்பில் நோட்டீஸ் அச்சடித்து வழங்கவில்லை. அவர் எனக்காக பரப்புரை செய்துள்ளார். இதில் தவறொன்றும் இல்லை” என்றார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக சார்பில் இந்தியில் விநியோகிக்கப்பட்ட நோட்டீஸ்

தொடர்ந்து திமுக வேட்பாளர் பேசிய போது, 'திமுகவின் இருமொழிக் கொள்கை என்றைக்கும் இருக்கும், இந்தியும் தமிழும்தான் எங்கள் உயிர்' என்றார். அப்போது உடனிருந்தவர்கள் அவரின் பிழையை சுட்டிகாட்டினர். உடனே அவர், “Sorry தவறாக சொல்லிவிட்டேன்” எனக்கூறிய நிலையில், மீண்டும் இந்தி என குறிப்பிட்டு பேசத்தொடங்கினார். பிறகு சுதாரித்துக்கொண்டு, “தமிழும் ஆங்கிலமும்தான் உயிர்” என்று மாற்றிப் பேசினார். அந்தக் காணொளி, இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.