பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா pt desk
தமிழ்நாடு

ஈரோடு | பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா - மேளதாளங்கள் முழங்க நடனமாடிய பக்தர்கள்

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று அதிகாலை பூச்சாட்டுதலுடன் தொடங்கிய நிலையில், மேளதாளங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.

PT WEB

செய்தியாளர்: டி.சாம்ராஜ்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழாஇன்று அதிகாலை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதில், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மேளதாளம் முழங்க நடனமாடி மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தெப்பக்குளத்திற்குச் சென்று தீர்த்தம் எடுத்துவரப்பட்டது.

இதைத் தொடர்ந்து பண்ணாரி அம்மனிடம் பூ வரம் கேட்டு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து நாளை முதல் பண்ணாரி அம்மன் உற்சவர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கிராமங்கள் தோறும் வீதி உலா நடைபெற உள்ளது. ஏப்ரல் 7, மற்றும் 8ம் தேதிகளில் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நடைபெற உள்ளது.