பாலியல் வன்கொடுமை - விஜய் - பழனிசாமி web
தமிழ்நாடு

+2 மாணவி கொலை| ’பாதுகாப்பில்லாத மாநிலமாகும் தமிழகம்..’ விஜய், EPS, அன்புமணி கண்டனம்!

17 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது என்று அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

PT WEB

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மற்றும் மதுராந்தகம் பகுதிகளில் நடந்த சம்பவங்கள் அரசியல் விவாதமாக மாறியுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். அதேபோல் மதுராந்தகம் அருகே, 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் பல கிலோமீட்டர் நடந்தே மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். பின்பு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். சமீப காலங்களில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் நடந்துக் கொண்டேயிருக்கிறது.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பெண்களுக்கு எதிராக நடக்கும் இந்தக் குற்றங்கள் அரசியல் ரீதியாக பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு இல்லை என்றும், தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து உள்ளதாகவும் கூறி தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

எடப்பாடி கே பழனிசாமி கண்டனம்..

தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை கொலைக்கு, அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தூத்துக்குடி அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சிறுமியை காணவில்லை என உறவினர்கள் புகார் அளித்தும் காவல்துறையினர் மெத்தனமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள அவர், மாணவியையே சந்தேகிக்கும் வகையில் போலீஸ் செயல்பட்டது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டத்தில் ஈடுபடும் உறவினர்களுடன் திமுக எம்எல்ஏ ஏன் சமாதானம் பேச வேண்டும் என்றும், இதன்மூலம் எதையாவது மறைக்க, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய திமுக முயல்கிறதா எனவும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக தலைவர் விஜய் கண்டனம்  

தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே? என, திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நெஞ்சை பதற வைப்பதாக எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியை தக்க வைப்பதில் மட்டுமே, முதல்வர் முழு கவனத்தையும் செலுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, நாமக்கல்லிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறிப்பிட்டு, தமிழக அரசுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி கண்டனம்..

மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை குறித்து தனது தளத்தில் பதிவிட்டிருக்கும் பாமக தலைவர் அன்பு மணி ரமதாஸ் பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்து போனது தமிழ்நாடு என்று காட்டமாக பதிவிட்டிருக்கிறார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 129% அதிகரித்திருக்கிறது. திமுக ஆட்சியில் பெண்களும், குழந்தைகளும் வாழ்த்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது என்பதற்கு இந்த புள்ளிவிவரங்கள் தான் கொடூரமான சான்று ஆகும் என்றும் பதிவிட்டுள்ளார்