2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோபிச்செட்டிப்பாளையத்தில் பிரசாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக நிர்வாகி செங்கோட்டையனை கடுமையாக தாக்கினார். குடும்ப புகாரால் பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தை மீண்டும் குறிப்பிட்டு பேசிய அவர், செங்கோட்டையன் மோசமானவர் என ஜெயலலிதாவே கூறியதாக வெளிப்படுத்தினார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஒருபக்கம் ஆட்சியை தக்கவைக்கும் மெகா கூட்டணியை அமைத்திருக்கும் திமுக, மறுபக்கம் லெகஸியை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் அதிமுக கூட்டணி, தவெக, நாதக, சசிகலா-ராமதாஸ் என 5 முனை போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில், அனைத்துக் கட்சி தலைவர்களும் அனல்பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருவதோடு, மற்ற கட்சியை குறித்து பகிரங்கமாக விமர்சித்தும் வருகின்றனர்.
இந்தசூழலில் தான் செங்கோட்டையன் போட்டியிடும் கோபிச்செட்டிப்பாளையத்தில் பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக நிர்வாகி செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்து பேசினார்.
ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, “மிகவும் கீழ்த்தரமாக பேசக்கூடிய மனிதர் செங்கோட்டையன், அவருக்கு எதிராக அவருடைய மனைவி, மகனுமே அம்மாவிடம் புகார் கொடுத்தார்கள். அதற்காக அவருடைய பதவி பறிக்கப்பட்டது. அது ஒரு கேவலமான புகார், அது என்ன புகார் என்று உங்கள் எல்லோருக்குமே தெரியும். அப்போது என்னை கூப்பிட்டு இப்படிப்பட்ட ஆளை கட்சியில் வைத்ததே தப்பா போயிடுச்சுனு அம்மா சொன்னாங்க. என்னுடைய அமைச்சரவையில் கண்ணீர் விட்டான் அந்த மனுசன், இப்போ வாய்க்கொழுப்பில் என்னென்னவோ பேசிட்டு இருக்கார்.
ஒருகாலத்தில் என்னுடைய நண்பராகத்தான் இருந்தார் அந்த நட்பின் அடிப்படையில் தான் நான் பேசுகிறேன், ஆனால் அந்த மரியாதை அவருக்கு இருக்கிறதா. இது போன்ற மனிதர்களை எல்லாம் மன்னிக்க முடியுமா. செங்கோட்டையன் அவர்களே நான் பச்சையா பேச ஆரம்பிச்சிடுவன், பதவிக்காக பேசாமல் இருக்கிறேன். நான் எப்பேர்ப்பட்டவன் என்று உனக்கு தெரியாது, என்னுடைய ஒரு முகத்தை தான் நீ பார்த்திருக்க. ஸ்டாலினிடமே விரலைவிட்டு ஆட்டியிருக்கிறேன். தாய் இல்லாத பிள்ளை போல நம்முடைய கட்சியிருக்கிறது, அதை உடைக்க எவ்வளவோ முயற்சி செஞ்சாங்க, அதற்கு நீ எப்படி உதவினனு எனக்கு தெரியும்” என காட்டமாக பேசினார்.