”பிடிஆருக்கு சொந்த கட்சியிலேயே மதிப்பில்லை..” - விமர்சித்த சுந்தர்.சி!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதுரை மத்திய தொகுதியில் திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக அதிமுக சார்பில் இயக்குநர் சுந்தர்.சி களமிறங்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் இத்தொகுதியில் பிரச்சாரம் செய்யாதது பிடிஆருக்கு சொந்தக் கட்சியிலேயே செல்வாக்கு குறைவு என சுந்தர்.சி குற்றம்சாட்டி, நிதியமைச்சர் மற்றும் கட்சிப் பதவிகள் நீக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிடும் மதுரை மத்திய தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது. திமுகவின் 12 போட்டித்தேர்தலில் 7 முறை வெற்றிவாகை சூடியிருக்கும் இத்தொகுதியில் தற்போது இயக்குநர் சுந்தர்.சி அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் பிடிஆர் மற்றும் சுந்தர் சி இருவருக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்தசூழலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் சுந்தர்.சி, ”தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு வருகை தந்து, மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், மதுரை மத்திய தொகுதியில் மட்டும் அவர் பிரச்சாரம் செய்யவில்லை. இது பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்குச் சொந்தக் கட்சியிலேயே எந்தளவுக்குச் செல்வாக்கு இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
படித்தவர், அறிவாளி என்று தற்பெருமை பேசிக் கொள்ளும் இவரை ஏன் நிதியமைச்சர் பதவியிலிருந்து முதலமைச்சர் தூக்கினார்? அதுமட்டுமின்றி, கட்சிப் பதவியான ஐ.டி விங் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டு, இவருக்குக் கீழ் இருந்த ஜூனியரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திலும் சரி, கட்சியிலும் சரி இவருடைய செயல்பாடு முதலமைச்சருக்குத் திருப்தி அளிக்கவில்லை என்பதையே இது உணர்த்துகிறது. தனது சொந்தக் கட்சியிலேயே செல்வாக்கு இல்லாத ஒருவரால், வெற்றி பெற்றால் மட்டும் இந்தத் தொகுதிக்கு எப்படி நல்ல திட்டங்களைக் கொண்டு வந்து சேர்க்க முடியும்” என விமர்சித்தார்.
மேலும், “இதுவரை எதிர்க்கட்சி வேட்பாளர்களை விமர்சிக்க மாட்டேன் என்று கூறிவந்த பி.டி.ஆர், தற்போது தான் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறி வருகிறார். நான் கேட்பது மக்களின் கேள்வி, பேசுவது மக்களின் குரல். ஆனால், அதற்குப் பதில் சொல்ல முடியாமல், தினமும் ஒவ்வொரு பிரச்சாரத்திலும் என்னைத் திட்டுவதிலேயே அவர் முழு நேரத்தையும் செலவிடுகிறார். என்னைப் பற்றிப் பேசுவதற்கு அவர் பயன்படுத்தும் பட்டப்பெயர்கள் மக்கள் அனைவருக்கும் தெரியும். ஒரு படித்தவர் பேசும் தரம் இதுதானா? கோபத்தில் அவர் பேசுவதைப் பார்க்கும்போது, இவ்வளவு நாள் அவர் அணிந்திருந்த பண்பாளர் என்ற முகமூடி கழன்று, அவரது உண்மையான சுயரூபம் வெளிப்பட்டுவிட்டது” என்று காட்டமாகத் தெரிவித்தார்

