செய்தியாளர்: ஸ்டாலின்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசிய போது...
“நீட் தேர்வை மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் கையை விரித்துவிட்டார். மாணவர்கள், பெற்றோர்களை முதலமைச்சர் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் ஏமாற்றி விட்டனர்.
நீட் தேர்வை மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என நாங்கள் சொன்ன போது, எங்களை ஏளனம் செய்தார்கள். இன்று திமுகவின் இரட்டை வேடம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. மகளிர் உரிமைத் தொகை பற்றி முதலமைச்சர் இன்று பெருமையாக பேசி உள்ளார். கடன் வாங்கிதான் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசின் வருவாயை பெருக்கி அதில் இருந்து மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தினால் பாராட்டலாம். கடன் வாங்கி திட்டம் செயல்படுத்துவதுதான் சாதனையா? எனில் கடன் வாங்குவதில்தான் திமுக அரசு சாதனை செய்துள்ளது.
அதிமுக ஆட்சியை விட தற்போது வரி வருவாய் அதிகரித்துள்ளது. வருவாய் அதிகரித்தும் ஒரு பெரிய திட்டமும் திமுக செயல்படுத்தவில்லை. பொள்ளாச்சி விவகாரத்தில் எங்களிடம் உள்ள ஆதாரத்தை சமர்ப்பித்துவிட்டோம். ஆனாலும், சபாநாயகர் முதலமைச்சருக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்லியுள்ளார். அவர் அப்படி சொல்லவில்லை என்றால் அவரால் அந்த சீட்டில் அமர முடியாது. இந்த பிரச்னையை முடித்துக் கொள்வதாக நாங்கள் கூறியதாக சொல்வது பொய். அவர்கள்தான் முடித்துக் கொள்வதாக சொன்னார்கள்... எங்களிடம் அனைத்துக்கும் ரெக்கார்டு தெளிவாக உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகருக்கு அமைச்சர்கள் அனைவரும் ஆதரவாக பேசுவதுதான் சந்தேகத்தை அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் யாரோ ஒரு முக்கிய நபர் தொடர்பில் உள்ளார். ஏதோ ஒரு மர்மம் உள்ளது.
பெரியார் குறித்து சீமான் பேசியது வருந்தத்தக்கது. பெரியாரால் ஏற்பட்ட நன்மைகள் ஏராளம் அதையெல்லாம் மறக்கக் கூடாது. மறைந்த தலைவர் குறித்து அவதூறு பேசுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதில்லை.
நேற்று சட்டப்பேரவையில் இரண்டு மணி நேரம் பேசினேன். வீடியோ கிளிப் கேட்டால் இரண்டு நிமிடம்தான் கொடுக்கிறார். இப்படிப்பட்ட சபாநாயகரிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்?
எங்களை நேரலையில் காட்டும்போது மட்டும் கேமராவுக்கு வைரஸ் பிடித்துக் கொள்கிறது; டெக்னிக்கல் பிரச்னை வந்துவிடுகிறது. ஆளும் கட்சியைக் காட்டினால் வைரஸ் போய்விடும். எங்களை காட்டினாள் வைரஸ் வந்துவிடும். அதான் காட்ட மறுக்கிறார்கள்” என தெரிவித்தார்.