தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருக்கையில் அரசு செயலர் ஏன் பேட்டி அளிக்க வேண்டுமென, கரூர் சம்பவம் தொடர்பாக அரசின் செய்தியாளர் சந்திப்பு குறித்து எதிக்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் துயரச் சம்பவத்துக்குப் பிறகு ஸ்டாலின் அரசு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், மக்களைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட தோல்வியை மறைப்பதே அரசின் நோக்கமாக இருப்பதாகவும் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடந்துவரும் நிலையில், வருவாய் செயலர் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது நீதி விசாரணையைப் பாதிக்கும் செயல் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவத்துக்கான பொறுப்பிலிருந்து தப்பிக்கவும், உண்மையை மறைக்கவும் அரசு நாடகமாடுவதாகவும் பழனிசாமி சாடியுள்ளார்.
இந்நிலையில், கரூர் துயர சம்பவத்திலிருந்து அரசியல் லாபம் பெற பழனிசாமி துடியாய் துடிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.
கரூர் பெருந்துயரம் தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் அறிக்கை அவரது பதற்றத்தை வெட்ட வெளிச்சமாக காட்டியிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். எந்த வகையிலாவது இத்துயர்மிகு சம்பவத்திலிருந்து அரசியல் லாபம் பெற முடியுமா என்று துடியாய்த் துடிப்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே நன்றாகவே தெரிவதாக அவர் சாடியுள்ளார். உண்மைகள் உணர்த்தப்படும் போது அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்து வழக்கம் போலவே ஒரு உளறல் அறிக்கையை வெளியிட்டுள்ளதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.