எடப்பாடி பழனிசாமி pt
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி சர்ச்சை கருத்து: அதிமுக கூட்டத்தில் ஆம்புலன்ஸ் தாக்குதல்.., மக்களின் பார்வையில் !

ஆம்புலன்ஸ்களை அனுப்பி இடையூறு செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குற்றஞ்சாட்டையடுத்து, அதிமுக பொதுக்கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று தாக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பற்றி காண்போம்.

PT WEB

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஆளுங்கட்சியினர் திட்டமிட்டு ஆம்புலன்ஸ்களை அனுப்பி இடையூறு செய்கிறார்கள் என குற்றஞ்சாட்டினார். இதனால், அதிமுக கூட்டத்தில் ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள், ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவது அவசியம் எனவும், முன்னாள் முதல்வர் மிரட்டல் தொனியில் பேசுவது தவறு எனவும் கருத்து தெரிவித்தனர்.

தனது தேர்தல் பிரசார கூட்டத்தின் நடுவே ஆளுங்கட்சியினர் திட்டமிட்டு ஆம்புலன்ஸ்களை அனுப்பி இடையூறு செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், ஆம்புலன்ஸ் ஓட்டி வரும் ஓட்டுநரே, நோயாளியாக மருத்துவமனைக்குப் போக வேண்டிய நிலை வரும் எனவும் எச்சரித்திருந்தார். இந்த நிலையில் அதிமுக பொதுக்கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்ததாக டிரைவரை அதிமுக தொண்டர்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் பேசிய கருத்துக்களை குறித்து காண்போம்.

தமிழ்நாட்டில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, கட்சிகளின் சார்பில் மாநிலம் முழுவதும் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்தப் பிரசாரத்திற்கு மத்தியில் ஆம்புலன்ஸ் பற்றிய விவகாரமும் விவாத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக கூட்டத்தில் ஆம்புலன்ஸ்

நடந்தது என்ன?

தனது தேர்தல் பிரசார கூட்டத்தின் நடுவே ஆளுங்கட்சியினர் திட்டமிட்டு ஆம்புலன்ஸ்களை அனுப்பி இடையூறு செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருந்தார். அது மட்டுமில்லாமல் ”அடுத்தமுறை ஆம்புலன்ஸில் நோயாளியை ஏற்றிக்கொண்டு வரவேண்டும். அடுத்தமுறை இப்படி வந்தால், ஆம்புலன்ஸ் ஓட்டி வரும் ஓட்டுநரே, நோயாளியாக மருத்துவமனைக்குப் போக வேண்டிய நிலை வரும்” என பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பலரும் அவருக்கு எதிராக கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி

ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்திய அதிமுக-வினர் !

இந்த நிலையில், திருச்சி மாவட்டம் துறையூரில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட இருந்தார். இந்த நிலையில் அவர் வருவதற்கு முன்பாக விபத்தில் சிக்கிய நபரை மீட்க 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அப்போது அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு காரணமாக எடப்பாடி பழனிசாமியின் கருத்தே என கருதப்படுகிறது.

ஆம்புலன்ஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்திய போது

தாக்குதலுக்கு உள்ளான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பெண்ணின் பேட்டி:

தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செந்தில் தெரிவித்ததாவது, அதிமுக கூட்டத்தில் ஒருவர் மயங்கி விழுந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது அவரை மீட்க நானும் டெக்னீசியன் ஒரு பெண்ணும் சென்றோம். அப்போது எங்கள் இருவரையும் அங்கிருந்த அதிமுக தொண்டர்கள் தாக்கினர். அதுமட்டுமில்லாமல் ஆம்புலன்ஸையுன் சரமாரியாக தாக்கினர் என்று தெரிவித்தார்.

தாக்குதலுக்குள்ளான பெண் டெக்னீசியன் கூறும்போது, மாலை 6.45 மணிக்கு எங்களுக்கு அதிமுக கூட்டத்தில் ஒருவர் மயங்கி விட்டதாக கால் வந்தது. அதற்காக அங்கு போகும் போது அதிமுக தொண்டர்கள் எங்களை தாக்கினர் என்று தெரிவித்தார். மேலும் அவர் 8 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்களின் கருத்து:

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தங்கள் கருத்துக்களை அளித்துள்ளனர். அதில் அவர்கள் தெரிவித்ததாவது,

”ஆம்புலன்ஸ் என்பது நோயாளிகளுக்கானது, எந்த ஒரு கூட்டத்திலும் ஆம்புலன்ஸ்-க்கு வழி விடுவது அவசியம். அந்த வண்டியில் நோயாளிகளின் நிலமை என்பது நமக்கு தெரியாது. அதனால் ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவது அவசியம். மேலும் ஒரு முன்னாள் முதலமைச்சர் வண்டியின் ஓட்டுனரை அடிப்பதற்காக தூண்டிவிடுவது சரியானதல்ல. மேலும் மிரட்டல் தொனியில் பேசுவது அவரின் வயதிற்கு தவறு என்று கூறிவிட முடியாது, அதை அவரே உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

மேலும் அவரின் கூட்டங்கள் அனைத்துமே பொது போக்குவரத்துப் பகுதிகளில் தான், மேலும் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனி வழி என்று ஒன்றும் கிடையாது. யாருக்காவது அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக அந்த வழியில் தான் போயாக வேண்டும், எனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறு” என பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.