திருவள்ளூர் மாணவி மீது தாக்குதல் pt
தமிழ்நாடு

மாணவி மீது தாக்குதல்| ”போதை, வன்கொடுமை, கொலை முயற்சி..” இதுதான் திமுக ஆட்சி! - EPS கண்டனம்

திருவள்ளூரில் மாணவி வீட்டுக்குள் புகுந்து 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கணடனம் தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே 17 வயது கல்லூரி மாணவி வீட்டின் மொட்டைமாடியில் படித்துக்கொண்டிருக்கும்போது, அடையாளம் தெரியாத மூவர் கத்தியால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஒருவரை அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்த நிலையில், இருவர் தப்பியோடினர். இதைத் தொடர்ந்து, திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வல்லூர் பகுதியில் 17 வயது கல்லூரி மாணவி நேற்றிரவு தமது வீட்டின் மொட்டை மாடியில் படித்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 3 பேர் திடீரென வந்து கத்தியால் வெட்டியதில் வலது கை, நெற்றி, பின்னந்தலை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

அப்போது அந்த மாணவி கூச்சலிட்டதில் வீட்டில் இருந்தவர்கள் அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று போதையில் இருந்த ஒருவரை பிடித்து அடித்து மீஞ்சூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் அந்த நபரை குறித்து விசாரித்ததில் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த டில்லி பாபு என தெரியவந்தது. பலத்த காயம் ஏற்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பிச்சென்ற இருவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

EPS கண்டனம்..

இச்சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, “திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

கஞ்சா போதை,

பாலியல் வன்கொடுமை,

கொலை முயற்சி,

இது தான் திமுக ஆட்சிக்காலம்!

படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலின் மாடல்.

இந்த மாடல் தான் மீண்டும் வரவேண்டும் என்று முக ஸ்டாலின் துடித்துக்கொண்டு இருக்கிறார்.

நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன்-

இத்தனை நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதை பற்றி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசினாரா?

தன் ஆட்சிக்கான Accountability இல்லாத, என்ன நடக்கிறது என்று Idea-வே இல்லாத ஒரு Dummy முதல்வர் தமிழ்நாட்டை ஆண்டது போதும்.

ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கேள்வி ஒன்று ஒன்று தான்-

தமிழகம் வாழ வேண்டுமா?

ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆகவேண்டும்!

#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !” என பதிவிட்டுள்ளார்.