எடப்பாடி பழனிசாமி - ஆ.ராசா
எடப்பாடி பழனிசாமி - ஆ.ராசா புதிய தலைமுறை
தமிழ்நாடு

எம்ஜிஆர் குறித்த ஆ.ராசாவின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் !

ஜெனிட்டா ரோஸ்லின்

திமுக எம்பியும் மூத்த தலைவருமான ஆ.ராசா, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-ஐ விமர்சித்து சமீபத்தில் பேசிய வீடியோவொன்று, சமூக வலைதளங்களில் வைரலானது. அது அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் இடையே கடும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியது. இதையடுத்து, ராசாவின் பேச்சுக்கு ஜெயக்குமார் போன்ற அதிமுகவை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அப்படி எதிர்கட்சித் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தற்போது தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஆ.ராசாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதில், “இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். என்றும் இன்றும் மக்கள் மனங்களில் இதயதெய்வமாக வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற மாண்புமிகு பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் குறித்து திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆண்டிமுத்து ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசி ஆதாயம் தேடிக்கொள்ள நினைப்பதுதான் சுயநலவாதி ஆண்டிமுத்து ராசாவின் வாடிக்கை.

அவர் பேசிய பாணியில், அவரைப் போல் அல்லாமல் , பல வரலாற்று உண்மைகளைப் பேச எங்களுக்கும் தெரியும் என்றாலும், தரம் தாழ்ந்த திமுக அளவிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் தரம் தாழாது.

இந்த ஆட்சியில், எனது தலைமையிலான கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு கருணாநிதி அவர்களின் பெயரை ஸ்டிக்கர் ஒட்டியும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும் , கழகத்தின் இதயதெய்வங்களான புரட்சித்தலைவர் - புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் புகழுக்கு இணையாக கருணாநிதியின் பெயரை என்ன முயற்சித்தும் உயர்த்த முடியவில்லை. அந்த ஆற்றாமையில்தான் ஆண்டிமுத்து ராசா போன்றோர் இதுபோன்ற அவதூறு கருத்துகளைப் பேசுவதாக நான் கருதுகிறேன்” என்று தனது கண்டனத்தினை பதிவு செய்துள்ளார்.

முன்னதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  இது குறித்து தெரிவிக்கையில், “ஆ ராசாவின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆ.ராசா 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திகார் சிறைக்கு சென்றார். என்ன ஆனது என்பது தெரியவில்லை. நாங்கள் திருப்பிக் கொடுத்தால் தாங்க மாட்டார், கருணாநிதியின் குடும்ப கடனை அடைத்தவர் எம்.ஜி.ஆர்.

ஜெயக்குமார்

கருணாநிதி முதல்வராக காரணமானவர் எம்.ஜி.ஆர். அவர் இல்லை என்றால் கருணாநிதியே கிடையாது. இது ராசாவுக்கு தெரியுமா? நேத்து பெய்த மழையில் முளைத்த காளான் மிகப்பெரிய ஒரு தலைவரை தராதரமின்றி விமர்சனம் செய்யக்கூடாது. ஆ.ராசாவுக்கு எந்த தகுதியும் இல்லை” என்று தனது கண்டனத்தை கடுமையாக பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.