கே. பழனிசாமி Pt web
தமிழ்நாடு

”துரோகத்தை வீழ்த்துவோம்; விபரீதமான செயல்களில் ஈடுபட வேண்டாம்” - தொண்டர்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்

அதிமுகவில் பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு இன்று கட்சியை அழிப்பதற்கான செயல்களில் ஒருசிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Premkumar S

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. பாஜக உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்திருந்தாலும் 47 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது அதிமுக. இந்தசூழலில், கே. பழனிசாமி தலைமை மீதான அதிருப்தியில், எஸ்.பி. வேலுமணி தரப்பு ஆட்சியமைக்க தவெகவுக்கு ஆதரவளித்திருந்தது. எனினும், இருதரப்பிடையேயும் தற்போது, சமாதானம் ஏற்பட்டிருக்கிறது.

இபிஎஸ், சண்முகம், வேலுமணி

ஆனாலும், அதிமுக எம்.எல்.ஏ-கள் 4 பேர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர். இதையடுத்து, தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாடி வருகின்றனர். இதற்கிடையில், அதிமுக நிலவிவரும் உட்கட்சிப் பூசல் காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த அதிமுக நிர்வாகி ஒருவர் நேற்றைய முன் தினம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவம் குறித்து அறிந்த அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி, அதிமுக நிர்வாகியில் உடலுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இந்தசூழலில் தான், அதிமுக தொண்டர்கள் விபரீதமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அதிமுக ஆரம்பித்ததில் இருந்தே பல்வேறு சோதனைகளையும், துரோகங்களையும் சந்தித்து நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். அதிமுகவில் பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு இன்று கட்சியை அழிப்பதற்கான செயல்களில் ஒருசிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. அதிமுக நிர்வாகி K.S. மகேந்திரன் தற்கொலை செய்திகொண்டிருப்பது மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது.

அதிமுகவில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலையைக் கண்டு அதிமுக தொண்டர்கள் மனம் தளர வேண்டாம்; எவ்வித விபரீதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம். விரைவிலேயே நாம் மீண்டெழுந்து எதிர்வரும் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். எனக்கு பின்னாலும், இன்னும் எத்தனை நூறாண்டுகள் வந்தாலும், அதிமுக மக்களுக்காகவே இயங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.