சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் சீனிவாசன் ராஜினாமா.. சபாநாயகரிடம் கடிதம்!
சட்டப்பேரவையின் முதன்மைச் செயலாளராக, 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் நியமனம் செய்யப்பட்ட சீனிவாசன், 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பும் அதே பதவியில் பதவி நீட்டிப்பு பெற்று தொடர்ந்தார். சட்டப்பேரவை செயலகம் தொடர்பான பணிகளில் அதிக அனுபவம் கொண்டவர் என்பதோடு அப்போதைய முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கமானவராகவும் சீனிவாசன் அறியப்பட்டார். இவரது, பதவிக்காலம் 2023 ஆண்டே முடிவடைந்த நிலையில், அவருக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டு இருந்தது.
அதேசமயம், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைந்த பின்னரும், சட்டப்பேரவைச் செயலாளராக தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் வழங்கியுள்ளார். அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு ஆட்சிக்காலத்திலும் சட்டப்பேரவைச் செயலாளராக பணியாற்றிய சீனிவாசனுக்கு நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் நவம்பர் மாதம் வரை இருக்கும் நிலையில், அதற்கு முன்பாகவே தனது பணியை விட்டு விலகியுள்ளார். அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் சாந்தி சட்டப்பேரவையின் அடுத்த முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளார்.

