டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரங்கள் விசாரணை நடத்தினர் .
டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில், மணப்பாக்கத்தில் இருக்கும் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் இல்லம் உட்பட 12 இடங்களில் காலையிலிருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சினிமா பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. விசாகன் வீட்டில் சோதனை நடந்து வந்த நேரத்திலேயே அருகே வாட்ஸ் அப் உரையாடல் நகல்கள் கிழித்து போடப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டனர். காகித துண்டுகளை அதிகாரிகள் கைப்பற்றி மீண்டும் வீட்டுக்குள் சென்று விசாரணை நடத்தினர். சோதனை நடைபெற்றபோது விசாகன் மனைவி, மற்றும் மகன் உடன் இருந்தனர்.
பின்னர் மாலை 3 மணியிலிருந்து நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் வைத்து விசாகனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள், மது கொள்முதல், விற்பனை, பணியாளர்கள் பணியிட மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது.
சுமார் 5 மணி நேரம் பல்வேறு கேள்விகள் கேட்டபின் விசாகனை அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்று அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்தனர். டாஸ்மாக் முறைகேடு சம்பவத்தில் கிடைத்த பணம் எங்கெல்லாம் சென்றிருக்கிறது. அந்த பணம் முதலீடாக மாறி இருக்கிறதா போன்ற விபரங்களை திரட்டுவதற்காக அமலாக்கத்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டதாக கூறுப்படுகிறது.