சோதனை pt web
தமிழ்நாடு

செந்தில்பாலாஜி நண்பர்களது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. 2 பைகள், ஒரு பெட்டியில் ஆவணங்கள் பறிமுதல்

கரூரில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்களது வீடுகளில், 14 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. 2 பைகள், ஒரு பெட்டி ஆகியவற்றில் ஏராளமான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றனர்.

PT WEB

கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்களான கொங்கு மெஸ் சுப்பிரமணி, ஒப்பந்ததாரர் சங்கர் மற்றும் கார்த்தி ஆகியோரது வீடுகளில் இன்று காலை கேரள மாநிலத்தில் இருந்து வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தத் தொடங்கினர்.

மூன்று வீடுகளிலுமே தனித்தனியாக சுமார் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 30க்கும் அதிகமான துணை ராணுவப் படையினரின் உதவியுடன் இந்த சோதனையை தொடங்கினர். காலையிலிருந்து இச்சோதனை நடைபெற்று வந்த நிலையில் இரவு எட்டு மணிக்கு மேல் கார்த்தி என்பவரது வீட்டில் சோதனையை நிறைவு செய்த அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். அப்போது அவர்கள் பெட்டி மற்றும் இரண்டு பைகளில் ஏராளமான ஆவணங்களையும் எடுத்துச் சென்றதாக தெரிகிறது.

இது மட்டும் இல்லாமல் செந்தில் பாலாஜியின் நண்பரான கொங்கு மெஸ் சுப்பிரமணி என்பவர் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனையின் போது இரவு ஏழு மணி சுமாருக்கு பிரிண்டர் ஒன்றை அதிகாரிகள் உள்ளே எடுத்துச் சென்றனர். அப்பொழுது சுப்பிரமணியின் வீட்டிலிருந்த கம்ப்யூட்டரில் இருந்து நிறைய தகவல்களை பிரிண்ட் எடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் 8 மணிக்கு பிறகு அவரது வீட்டில் இருந்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை நிறைவு செய்து வெளியேறினர்.

அரசு ஒப்பந்ததாரரும் மற்றொரு நண்பருமான சங்கர் என்பவரது வீட்டில் 10 மணியளவில் சோதனை நிறைவு செய்யப்பட்டது. அங்கிருந்தும் அதிகாரிகள் ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி நண்பர்கள் ஆன மூவர் வீட்டிலும் நடைபெற்ற சோதனை சுமார் 14 மணி நேரத்துக்குப் பிறகு நிறைவு பெற்றது.

அரசு ஒப்பந்ததாரரான சங்கர் என்பவரின் பெற்றோர்கள் கரூர் அருகில் உள்ள மாயனூர் என்ற கிராமத்தில் வசித்து வருகின்றனர். அவரது வீட்டிற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் இரண்டு கார்களில் சோதனை நடத்த சென்றனர். அப்பொழுது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால், அதிகாரிகள் காத்திருந்தனர்; பிற்பகல் 3 மணி வரை காத்திருந்தும் யாரும் வீட்டுத் கதவை திறக்க வராததால் சோதனை நடத்தும் முயற்சியை கைவிட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

சோதனையின்போது ஒப்பந்த்தாரர் சங்கர், கொங்கு மெஸ் மணி ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்தனர். அவர்களிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏற்கனவே வைத்திருந்த ஆவணங்களை காண்பித்து பல்வேறு சந்தேகங்களையும் கேட்டதாக கூறப்படுகிறது. கார்த்தி வீட்டில் இல்லாததால் அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.