thangam thennarasu
thangam thennarasu file image
தமிழ்நாடு

மின்கட்டணம் செலுத்தவில்லையா? கவலையே வேண்டாம்.. அபராதமும் இல்லை.. தமிழ்நாடு அரசின் GOOD NEWS!

யுவபுருஷ்

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வடகடலோர மாவட்ட மக்களின் வாழ்க்கை முழுவதுமாக முடிங்கியுள்ளது. குறிப்பாக சென்னையின் பல இடங்களில் அத்தியாவசிய சேவைகளும் கிடைக்காமல் மக்கள் முடங்கியுள்ளனர். இதற்கிடையே மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான், மின்கட்டணம் செலுத்துவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

அவரது அறிவிப்பில், “மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து, முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 3 தினங்களாக மின்கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைப்படி, மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மின் உபயோகிப்பாளர்களின், மின்கட்டணம் செலுத்தும் கடைசி தேதி 04.12.2023 முதல் 07.12.2023 வரையாக இருந்த நிலையில், புயல் மழையால், அபராதத் தொகை இல்லாமல் 18ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. மின்கட்டணத்துடன் ஏற்கனவே 04.12.2023 முதல் 06.12.2023 வரை அபராதத் தொகை செலுத்தி இருப்பின், அந்த அபராதத் தொகை அடுத்த மாத மின்கட்டண தொகையில் சரிக்கட்டப்படும்” என்று தெரிவித்துள்ளார்.