உழைப்பாளர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும் அவர்களின் உரிமைகளை நினைவுகோரும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மே 1ம் தேதி உலகத் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், தொழிலாளர் தினமான இன்று, முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் உள்ள நினைவுத் தூணில் மரியாதை செலுத்தி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே என் நேரு, எ.வ. வேலு, சேகர்பாபு, ஆ.ராசா, மேயர் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடந்து முடிந்திருக்கும் நிலையில், மே- 4 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கும் இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், திமுக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான ஊடகங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் தான், இன்று நடைபெற்ற மே தின விழாவில் உரையாற்றியிருக்கும் முதல்வர் ஸ்டாலின், தொழிலாளர் தினம் குறித்தும், தேர்தல் முடிவுகள் குறித்தும் உரையாற்றியிருக்கிறார்.
மே தின விழாவில் உரையாற்றியுள்ள முதல்வர் ஸ்டாலின், "உரிமைக்காகவும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த மே முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் முதன் முதலில் மே முதல் நாளை சென்னையில் தான் கொண்டாடத் தொடங்கினோம். சிந்தனை சிற்பி சிங்காரவேலர் தலைமையில் தான், சென்னையில் முதன்முதலில் மே தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. அதேபோல, பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் அரசு மே முதல் நாள், விடுமுறையாக அறிவித்து மே தினத்தை கொண்டாடத் தொடங்கினார், ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக மட்டுமில்லாமல் அந்த விடுமுறை நாளை சட்டமாக்கிக் கொடுத்தவர் அண்ணாவிற்கு பிறகு முதல்ராக பொறுப்பேற்ற நம்முடைய கலைஞர்.
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தொழிலாளர்களுக்கான உரிமை என்பது போல, நம்முடைய கழகத் தோழர்கள் உழைத்திருக்கக்கூடிய உழைப்பிற்கான பலன் வரும் 4-ம் தேதி நாம் பெறவிருக்கிறோம். அதில் ஒரு துளி அளவும் எந்த மாற்றமும் இல்லை. அதேசமயம், கருத்துக்கணிப்பு அடிப்படையில் நான் சொல்கிறேன் என்ற அவசியம் இல்லை. கழக உணர்வை உணர்ந்து கொண்டிருக்க கூடிய காரணத்தினால் தான் இந்தக் கருத்தை நான் எடுத்து வைக்கிறேன். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும். எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தோடுதான் அந்தக் கொள்கையோடு தான் நாம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம் அது தொடரும்., தொடரும்., தொடரும்" என தெரிவித்துள்ளார்.