மக்களவை தேர்தல் 2024
மக்களவை தேர்தல் 2024 முகநூல்
தமிழ்நாடு

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கே சென்று வாக்கு சேகரிப்பு!

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழ்நாட்டில் பல இடங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்களின் வீட்டுக்கே சென்று வாக்குகள் சேகரித்தனர் அதிகாரிகள்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் 85 வயதை கடந்த 171 பேர் மற்றும் 67 மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், 4 நடமாடும் வாக்கு சேகரிப்புக் குழுவினர் வீடு வீடாகச் சென்று சம்பந்தப்பட்ட நபர்களிடம் தபால் வாக்குகளைப் பெற்றனர்.

இதேபோல கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட விராலிமலை சட்டப்பேரவை தொகுதியில் 296 மாற்றுத் திறனாளிகளிடமும், 85 வயதிற்கு மேற்பட்ட 342 முதியவர்களிடமும், 11 நடமாடும் வாக்கு சேகரிப்பு குழுக்கள் மூலம் தபால் வாக்குகள் பெறப்பட்டன.

ஈரோட்டில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தகுதி வாய்ந்தவர்களாகத் தேர்வான 3,001 வாக்காளர்களிடம் தபால் வாக்குகளைப் பெறும் பணியில் 49 குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஜான்சி நகரில், 85 வயதிற்கு மேற்பட்டவரிடம் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புடன் தபால் வாக்கு பெறப்பட்டது. தருமபுரி நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொளகம்பட்டியில் 85 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டன.

அதிகாரிகள் தெரிவிக்கையில், “நடமாடும் தேர்தல் பார்வையாளர் குழுவினர் வாக்கு சேகரிக்க வீடுகளுக்குச் செல்லும் போது அங்கு சம்பந்தப்பட்ட நபர்கள் இல்லாத பட்சத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (இன்று மற்றும் நாளை) மீண்டும் அவர்கள் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்குகளை சேகரிப்போம்” என்றனர்.