தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரியில் பிரசாரம் செய்த தவெக தலைவர் விஜய், லஞ்சமில்லா நலத்திட்ட விநியோகம், ‘தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்’, ‘வெற்றி தமிழ்நாடு’ சூப்பர் ஆப், மக்கள் மனுக்களுக்கு சட்டமன்ற விவாதம் போன்ற திட்டங்களை அறிவித்தார். செயற்கை நுண்ணறிவு தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவோம் என்றும், மீனவர் பாதுகாப்பு உரிமைத் தொகையை 20,000 ரூபாயாக உயர்த்துவோம் என்றும் உறுதியளித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. திமுக, அதிமுக, நாதக ஆகிய கட்சிகள் ஏற்கனவே களத்தில் உள்ள சூழலில், புதிதாக களம்காணும் தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று கன்னியாகுமரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தவெக தலைவர் விஜய், சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதோடு, சில தேர்தல் வாக்குறுதிகளையும் வழங்கினார்.
கன்னியாகுமரி மக்களுக்கு இடையில் பேசிய தவெக தலைவர் விஜய், “லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டம் சென்று சேரும், அதற்கென அட்டை வழங்கப்படும். இனி லஞ்சம் கொடுத்து வேதனை அடையத் தேவையில்லை; வீட்டு வாசலில் அரசாங்க திட்டங்கள் வரும்; இது ஸ்டாலின் சார் விடும் கதை இல்லை; அறிவியல்பூர்வமாக சாத்தியமான ஒன்றைத்தான் சொல்கிறேன்.
தவெக ஆட்சி அமைந்தால் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம், வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப் உருவாக்கப்படும். தமிழ்நாடு அரசின் பட்ஜெட், ஒதுக்கப்படும் நிதி எல்லாம் சிதம்பரம் ரகசியம்போல இருக்கிறது, அதை நாம் மாற்றுவோம். மக்கள் வெறும் வாக்காளர்களாக இல்லாமல் பங்காளர்களாக இருப்பார்கள்.
மாநிலத்தின் வளர்ச்சிக்கான யோசனைகளை மக்கள் கூறும் வகையில் இணையதளம் உருவாக்கப்படும்; மக்கள் அரங்கம் திட்டத்தில் மக்கள் டிஜிட்டல் தளத்தில் மனுக்களை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கும் திட்டம் இது. 10ஆயிரம் பேர் கையொப்பம் இட்ட மனுமீது அரசு அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கும், அதேபோல 5 லட்சம் பேர் கையொப்பம் இட்ட மனுமீது சட்டமன்றத்தில் விவாதம் நடத்தப்படும்.
செயற்கை நுண்ணறிவு தலைநகராக தமிழ்நாடு மாற்றப்படும். பொறியியல் திறமையுடன் பொருளாதாரம் தனதாக்கப்படும். சேலம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் செயற்கை நுண்ணறிவு புத்தாக்க மையங்கள் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் Al பல்கலைக்கழகம் உருவாக்கப்படும், செயற்கை நுண்ணறிவுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும்” உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கினார்.
தொடர்ந்து மீனவர்களின் நண்பனாக சில அறிக்கைகளை வாசித்த தவெக தலைவர் விஜய், “மீனவர் பாதுகாப்பு உரிமைத் தொகை ரூ.8,000 லிருந்து ரூ. 20,000ஆக உயர்த்தி வழங்கப்படும். கடல்தாய் வீட்டு வசதித் திட்டத்தில் சிதிலமடைந்த குடியிருப்பை அகற்றி வீடுகள் கட்டித்தரப்படும்” என தெரிவித்தார்.