Flying squad
Flying squad pt desk
தமிழ்நாடு

கோவை | பாஜக மீது பணப்பட்டுவாடா புகார்.. ரூ 81,000 மற்றும் பூத் சிலிப் பறிமுதல்! பறக்கும் படை அதிரடி!

webteam

செய்தியாளர்: ஐஷ்வர்யா

தமிழகத்தில் ஒரே கட்டமாக நாளை (19 ஆம் தேதி) மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்த நிலையில், வெளியூரில் இருந்து வந்த நபர்கள் அந்தந்த ஊர்களைவிட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூலுவபட்டி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

Flying squad

இதையடுத்து சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அனுப்பிய தகவலின் அடிப்படையில் மாநில துணை வரி அலுவலர் புஷ்பா தேவி, சிறப்பு உதவி ஆய்வாளர் காளீஸ்வரி, சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கோவை பூலுவபட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் டீக்கடையில் சிலர் வார்டு வாரியாக வாக்காளர்களுக்கு பணம் வழங்க விவரம் எழுதிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் அந்த நபர்களை பிடித்த பறக்கும் படையினர், அவர்களிடம் விசாரணை செய்தனர்.

அதன்முடிவில் ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதிமணி என்பவர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூபாய் 81,000 பணம் மற்றும் வாக்காளரின் பெயர், முகவரி அடங்கிய பூத் சிலிப் ஆகியவற்றை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதை பேரூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Jothimani mari muthu

இதையடுத்து ஆலந்துறை மண்டல தலைவர் ஜோதிமணி மற்றும் பாஜக மாநகர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர் தாங்கள் விவசாயிகள் என பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சரியான விளக்கம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளுமாறு பறக்கும் படையினர் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

கோவை ஆட்சியர் அலுவலகம்

முன்னதாக, பூலுவபட்டி பஞ்சாயத்தில் வார்டு எண் 12,13,14,15 ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அடுத்தடுத்த வார்டுகளுக்கு பணம் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொண்ட சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, ஆலந்துறை காவல் நிலையத்தில் இன்று வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.