தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிக்கான ஆயத்தங்கள் தொடங்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளும் தி.மு.க அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி இந்த நடவடிக்கை தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், வாக்காளர்களைச் சரிபார்க்கவும், புள்ளிவிவரப் பிரிப்பிற்கும் தேவையான, ஜூலை 1, 1987 முதல் செப்டம்பர் 23, 2025 வரையில் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழ் தரவுகளைக் கோரியுள்ளதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிக்கான கால அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் திட்டப்படி, தமிழகத்தில் உள்ள 197 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2002ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலும், நகர்மயமாக்கப்பட்ட 37 தொகுதிகளுக்கு 2005ஆம் ஆண்டு பட்டியலும் அடிப்படையாகக் கொள்ளப்படும். அதிகாரிகள் மூலம் வீடு வீடாகக் கணக்கெடுப்பு நடத்தப்படும். வாக்காளர் எண்ணிக்கையை ஒரு சாவடிக்கு 1,200 ஆகக் கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் கூடுதலாக 7,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
இந்த முழுப் பணியையும் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ள பிஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நிறைவடைந்துள்ளது. பிஹாரில் எஸ்.ஐ.ஆர் பணி முடிந்து புதன்கிழமை வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 3 லட்சத்து 66 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதியற்றவர்கள் என்ற காரணத்தால் நீக்கப்பட்டுள்ளார்கள். எஸ்.ஐ.ஆர் பணிகளைப் பிற்படுத்தப்பட்ட மற்றும் விளிம்புநிலை வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. ஆனால் தகுதியான வாக்காளர்கள் யாரும் பட்டியலிலிருந்து நீக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
அந்நிய நாடுகளிலிருந்து ஊடுருவிய சட்டவிரோதக் குடியேறிகளை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு எஸ்.ஐ.ஆர் பணி அவசியம் என்று மத்திய பாஜக அரசும், பாஜக ஆட்சியில் இருக்கும் மாநில அரசுகளும் கூறி வருகின்றன. எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், பாஜகவுக்கு எதிராக வாக்காளர்களை பட்டியலிலிருந்து நீக்கி தேர்தல் முடிவுகளை பாஜகவுக்குச் சாதகமாக வடிவமைக்கும் திட்டம் என்று ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.
இந்தப் பின்னணியில் தமிழ்நாட்டிலும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கான ஆயத்தங்கள் தொடங்கி இருப்பது மத்திய பாஜக அரசுக்கும் தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசுக்கும் இடையில் மற்றொரு அரசியல் யுத்தத்தைத் தொடங்கிவைக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.