அதிமுக உட்கட்சி பிரச்சனை பெரிதாக வெடித்துள்ள நிலையில் இன்று அதிகாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார்.
ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, தினகரன் போன்றோரை எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைத்து செல்ல வேண்டும் என்றும் ஒருங்கிணைந்த அதிமுகதான் வலிவானதாக இருக்குமென்றும் குரல்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து அளித்தப் பேட்டியில், பிரிந்துள்ள அதிமுக ஒருங்கிணைய வேண்டும். அதற்கான முயற்சிகளில் எடப்பாடி பழனிசாமி 10 நாட்களுக்குள் இறங்க வேண்டும் எனவும் கெடு விதித்திருந்தார். இதனால், இந்த செய்தியாளர் சந்திப்பு நடந்த அடுத்த நாளே செங்கோட்டையனை அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டிருந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து, மனநிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன் எனக்கூறிச் சென்ற செங்கோட்டையன் திரும்பி வந்து செய்தியாளர்களை சந்தித்து, டெல்லி சென்றதாகவும் அங்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை சந்தித்ததாகவும் அவர்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசியதாகவும் தெரிவித்தார்.
இந்தநிலையில்தான் நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம். இம்மியளவு கூட விட்டு கொடுக்கமாட்டேன். சில பேரை கைக்கூலியாக வைத்து கொண்டு ஆட்டம் போட்டு கொண்டு இருக்கிறீர்கள். அந்த கைக்கூலிகள் யார் என்று அடையாளம் காட்டிவிட்டோம். அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும் எனக் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, இன்று அதிகாலையிலேயே எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் சென்றிருக்கிறார். அங்கு, துணைக்குடியரசுத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர், மாலை 4 மணிக்கு அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ள நிலையில் டிடிவி தினகரன் தஞ்சாவூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துப் பேசியிருக்கிறார். அதில், தனக்கு தன்மானம் தான் முக்கியம் தான் எனப்பேசும் எடப்பாடி பழனிசாமி தற்போது டெல்லி சென்றுள்ளது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து அதிமுக 2026-ல் அதிமுக தோற்றால் அமமுக காரணம் அல்ல என்றும் இன்னும் டெல்லியில் உள்ளவர்கள் டிடிவி தினகரனை சரி செய்வார்கள், டிடிவி தினகரன் வந்துவிடுவார் என்று பகல் கனவு கண்டால் நாங்கள் பொறுப்பல்ல என்று கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தமிழ்நாட்டில் பல பிரச்னைகள் உள்ளது. சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ள நிலை தமிழ்நாட்டில் உள்ளது.. எண்ணற்ற வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை இருக்கிறது. அதனைக்கூட மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்வதற்காக சென்றிருக்கலாம்” என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.