எடப்பாடி பழனிசாமி, தர்மேந்திர பிரதான் pt web
தமிழ்நாடு

“ரூ5000 கோடி தமிழ்நாட்டிற்கு இழப்பா? மத்திய அமைச்சரின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது” - இபிஎஸ் அறிக்கை

“தமிழ் நாட்டிற்கு, இந்த காலக்கட்டத்தில் மும்மொழிக் கொள்கை என்பது தேவையற்ற ஒன்றாகும். இந்த நிலைப்பாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

PT WEB

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதிய கடிதத்தில், “புதிய தேசிய கல்விக் கொள்கை மாநில மொழிகளை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றுகிறத. மும்மொழிக்கொள்கை மிக முக்கியம். தேசிய கல்விக் கொள்கை மூலம் தமிழ் உள்பட ஒவ்வொரு இந்திய மொழியும் கல்வியில் உரிய இடத்தை பெறுவதை உறுதி செய்யமுடியும்.

அரசியல் காரணங்களுக்காக புதிய கல்விக்கொள்கைக்கு தொடர்ந்து தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த விஷயத்தை தமிழக அரசு முழுமையாக பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டும்தான் தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து நிதி வழங்கப்படும் என்பதையும் மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே, தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பாஜக தவிர பெரும்பாலான அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவர் கூறியுள்ளதாவது, “மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சில ஷரத்துக்கள் உள்ளன என்று பல்வேறு தருணங்களில் சுட்டிக்காட்டியும், அதை தமிழகம் எந்த மாற்றமுமின்றி பின்பற்ற வேண்டும் என்று வலுக்கட்டாயமாக வற்புறுத்துவதும், இதுவரை தமிழகத்தில் சிறப்பான சாதனைகளை கல்வித் துறையில் அடையக் காரணமாக பின்பற்றப்பட்டுவரும் இருமொழிக் கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், மும்மொழிக் கொள்கையை வற்புறுத்தித் திணிக்க முயலும் மத்திய அரசின் முயற்சியால், தமிழக மக்களிடையே அச்சமும், குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது.

மத்திய அமைச்சரின் கூற்று அதிர்ச்சி: இபிஎஸ் அறிக்கை

இந்தச் சூழ்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் 'PM SHRI' திட்டத்தை ஏற்காவிட்டால் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை தமிழகம் இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளதாக வரும் செய்திகள் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், மத்திய அரசின் மீது மிகுந்த கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கு, மத்திய அரசு SSA சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தில் வழங்கக்கூடிய பங்கு நிதியினை இந்த ஆண்டு திடீரென்று புதிய கல்விக் கொள்கை திட்டத்தை ஏற்காவிடில், மத்திய அரசின் நிதியான ரூபாய் ஐந்தாயிரம் கோடியை தமிழகம் இழக்க நேரிடும் என்று மத்திய கல்வி அமைச்சர் கூறுவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது!

எடப்பாடி பழனிசாமி

'உலகமயமாக்கல்' உள்ள இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்கள் ஆங்கில மொழியில் புலமை பெற்றதால்தான் உலக அளவில் இன்று அவர்கள் கோலோச்சி வருகின்றார்கள். ஆங்கிலம் அல்லாத பிற மாநிலங்களிலும், நாடுகளிலும்கூட அந்தந்த மொழிகளை தேவைக்கேற்ப கற்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்கள். எனவே தமிழ் நாட்டிற்கு, இந்த காலக்கட்டத்தில் மும்மொழிக் கொள்கை என்பது தேவையற்ற ஒன்றாகும். இந்த நிலைப்பாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது. மத்திய அரசு இந்த உண்மை நிலையை உணர்ந்து தமிழ் நாட்டில் மும்மொழிக் கொள்கை திணிப்பைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.