ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக் புதியதலைமுறை
தமிழ்நாடு

ஜாபர் சாதிக் வீடு, அமீர் அலுவலகம் என மொத்தமாக சுத்துப்போட்ட ED அதிகாரிகள்.. 25 இடங்களில் சோதனை!

யுவபுருஷ்

சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் திமுக நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கடந்த மாதம் 9ம் தேதி ஜாபர் சாதிக், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரால் கைதான நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அத்தோடு வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து, சீலை அகற்ற வேண்டும் என்று குடும்பத்தார் வழக்கு தொடர்ந்ததையடுத்து, வீட்டின் சீல் சமீபத்தில் அகற்றப்பட்டு, ஜாபர் சாதிக்கின் குடும்பத்தினர் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில், ஜாபர் சாதிக் தயாரித்த இறைவன் மிகப்பெரியவன் படத்தை இயக்கிய அமீருக்கும் இவ்வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரிடமும் போதைப்பொருள் தடுப்பு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை சாந்தோமில் இருக்கும் ஜாபர் சாதிக்கின் வீடு உள்ள சுமார் 25 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தி.நகர், வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், அயனாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை தியாகராயநகரில் உள்ள இயக்குநர் அமீர் அலுவலகம் மற்றும் சிட்டி செண்டரில் அவருக்கு சொந்தமான தி லா கஃபே டீ ஸ்டாலிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, அவரது அலுவலகத்தில் 5 பேர் கொண்ட அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் இருக்கின்றனர்.

ஜாபர் சாதிக் வீடு மற்றும் அலுவலகம் உட்பட அவருக்கு தொடர்புடைய இடங்கள், அமீருக்கு தொடர்புடைய இடங்கள் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில், அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.