காதுகுத்து திருவிழா
காதுகுத்து திருவிழா புதிய தலைமுறை
தமிழ்நாடு

85 வயது தாய்மாமா மடியில் உட்காரவைத்து 60 வயதுடையவர்களுக்கு காதுகுத்து! வேலூரில் சுவாரஸ்ய சம்பவம்!

PT WEB

தமிழர்களின் பண்பாட்டில் குழந்தை பிறந்து ஐந்து வயதிற்குள்ளாக காது குத்துதல் என்ற வைபவத்தை குடும்பத்தார்கள் நடத்துவது மரபு. ஆனால் வேலூரில் முதியவர்கள் இருவருக்கு, சொந்த பந்தங்கள் ஒன்றிணைந்து காதுகுத்தும் வைபவத்தை நடத்தியுள்ளனர். அதுவும் அம்முதியவர்களின் தாய்மாமாவின் மடியில் அமரவைத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

காதுகுத்து திருவிழா

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியை அடுத்த மருதுவல்லிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஏரிக்கோடி எனும் கிராமத்தில் வசித்து வரும் சகோதரர்கள் முனிவேல் (60) மற்றும் ராஜா (55). இவர்கள் இருவரும் கூலி தொழில் செய்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் குடும்பத்தில், மொத்தம் 5 ஆண்கள் 3 பெண்கள் என எட்டு பேர் பிறந்துள்ளனர். இதில் முனிவேல், ராஜா தவிர மற்றவர்களுக்கு சிறுவயதிலேயே திருப்பதியில் மொட்டை அடித்து காது குத்து விழா நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் இரண்டு பேருக்கு மட்டும் காது குத்தப்படாமல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் அவர்கள் குடும்பத்தார் ஒன்றிணைந்து இரண்டு பேருக்கும் காது குத்து விழா நடத்த வேண்டும் என ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதற்காக நேற்று முன்தினம் குலதெய்வம் கோவிலில் கோலாகலமாக பொங்கல் வைத்து கிடா வெட்டி காது குத்து விழா நடத்தியுள்ளனர்.

இதில் 60 வயதான முனிவேல் மற்றும் 55 வயதான ராஜா இருவருக்கும், அவர்களின் தாய் மாமாவான 85 வயது தங்கவேல் என்பவரின் மடியில் அமரவைத்து காது குத்து விழா நடத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட வகைவகையான தட்டு வரிசை வைத்து ஆரவாரம் செய்தும் மகிழ்ந்துள்ளனர் உறவினர்கள்.

60 வயது முதியவருக்கு 85 வயது தாய்மாமாவின் மடியில் அமர்ந்து காது குத்து விழா நடைபெற்றது, அப்பகுதியில் நெகிழ்ச்சியாக பேசப்பட்டு வருகிறது.