திமுக ஆட்சிக்காலத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என். நேரு இருந்தபோது, சுமார் 634 கோடி மதிப்பிலான ஒப்பந்த (டெண்டர்) முறைகேடுகள், சாலை உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு கமிஷன் பெற்றது மற்றும் லஞ்சம் வாங்கிக்கொண்டு 2,538 அரசுப் பணியிட பணிநியமனங்கள் செய்தது போன்ற புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, தமிழக டி.ஜி.பிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பிய நிலையில், இந்த கடித்தத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கே.என்.நேரு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை கடந்த அக்டோபர் 26 அன்று சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதன்படி, தற்போது முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சி தில்லைநகர் இல்லத்தில் இன்று காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடக்கும் சமயத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள்ளேயே இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கே.என்.நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மகனுக்கு வரும் 16-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள சூழலில், இந்தத் திடீர் சோதனை அரசியல் வட்டாரத்தைத் தாண்டி அவரது குடும்ப உறவினர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோதனை குறித்த தகவல் பரவியதை அடுத்து, தில்லை நகர் இல்லத்தின் முன்பாக திமுக தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளதால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி கே.என்.நேருவுக்குத் தொடர்புடைய சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியிருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே, 2-வது முறை இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.