தூங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தை மாயம்.. 35 நாட்களுக்குப் பிறகு மீட்பு.. இதுவரை நடந்தது என்ன?
செய்தியாளர் - நாராயணசாமி & ராஜ்குமார். ர
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சேகர்- பிரேமா தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி சாலையோரத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த அந்தக் குழந்தை திடீரென காணாமல் போனது. குழந்தையைப் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். குழந்தையை மீட்பதற்காக முதற்கட்டமாக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், குழந்தை காணாமல் போனது தொடர்பாக உறுதியான தடயங்கள் கிடைக்காததால் விசாரணை விரிவுபடுத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, லாலாப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், சிப்காட் பகுதியில் இருந்து வேலூர், ஆற்காடு, பொன்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் வழித்தடங்களிலும் பொருத்தப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இதனடிப்படையில், சந்தேகத்துக்குரிய வாகனங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி, கடப்பா உள்ளிட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சம்பவத்தன்று ராணிப்பேட்டையிலிருந்து ஆந்திர மாநிலத்துக்குச் சென்ற வாகனங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்காகத் தனிப்படையினர் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு, சந்தேகத்துக்குரிய நபர்களிடமும் வாகன ஓட்டுநர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா பகுதியில் குழந்தை இல்லாமல் வசித்து வந்த மல்லேஸ்வரி என்பவரிடம் குழந்தையை ஒப்படைக்கும் நோக்கில், அவருக்குத் தெரிந்தவர்கள் குழந்தையை அழைத்துச் சென்றதாக முதற்கட்டத் தகவல்கள் கிடைத்துள்ளது.. இதையடுத்து, ஆந்திர மாநிலத்துக்குச் சென்ற தனிப்படை காவல்துறையினர், அங்கு ஓர் அறையில் இருந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். இந்த வழக்கு தொடர்பாகச் சந்தோஷ் , குமார், பூபதி , கௌசல்யா , மல்லேஸ்வரி ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

