விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள கீழ்விசிறி கிராமத்தில், 1939 ஆம் ஆண்டு சஞ்சீவிராய கவுண்டர் - நவநீதி அம்மாள் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் ராமதாஸ். ஏழ்மையான குடும்பப் பின்னணியில் வளர்ந்தாலும், தனது விடாமுயற்சியால் படித்து மருத்துவரானார்.படிப்பை முடித்தவுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மூன்று ஆண்டுகள் சேவையாற்றினார். அதனைத் தொடர்ந்து சொந்தமாகக் க்ளினிக் தொடங்கிய அவர், ஏழை எளிய மக்களுக்காக வெறும் 2 மற்றும் 3 ரூபாய் கட்டணமாக நிர்ணயித்து மருத்துவம் பார்த்தார். தன்னிடம் சிகிச்சைக்கு வரும் ஏழை நோயாளிகளுக்குப் பேருந்து கட்டணத்திற்கும் பணம் கொடுத்து உதவியதோடு, மருந்துச் சீட்டுகளில் தூய தமிழில் நோயின் பெயர்களை எழுதியும் வந்தார். அப்பகுதி மக்களால் கைராசியான டாக்டர் என அன்போடு அழைக்கப்பட்டு, மக்களின் நன்மதிப்பைப் பெற்றார்.
கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் முற்போக்குச் சிந்தனைகளால் ஆழமாக ஈர்க்கப்பட்டவர் மருத்துவர் ராமதாஸ். தன் சமுதாய மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கியிருப்பதை உணர்ந்த அவர், அப்போதைய காலத்தில் 28 வன்னியர் அமைப்புகளை ஒன்றிணைத்து, 1980 ஆம் ஆண்டு வன்னியர் சங்கத்தைத் தொடங்கினார். 1980களில் தன் சமுதாயத்துக்காகத் தொடர் மறியல்கள், பட்டினிப் போராட்டங்கள் எனப் பல முன்னெடுப்புகளைச் செய்தார். வன்னியர் தனி இடஒதுக்கீட்டுக்காக எம்ஜிஆர் ஆட்சியில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டங்களின் உச்சகட்டமாக 21 உயிர்த்தியாகங்கள் நிகழ்ந்தன. இதன் விளைவாக, 1989இல் அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி ஆட்சியில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த சாதிகளிலிருந்து வன்னியர் உள்ளிட்ட 108 சாதிகளைத் தனியாகப் பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு உருவாக்கப்பட்டது.
வன்னியர் சங்கத்தின் பலம் தேர்தல் அரசியலிலும் ஒலிக்க வேண்டும் என்ற நோக்கில், 1989 ஜூலை 16 ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியை ராமதாஸ் தொடங்கினார். கட்சி தொடங்கிய தொடக்கக் காலத்தில் தேர்தல் களத்தில் பல பின்னடைவுகளைச் சந்தித்தாலும், முதல் தேர்தலிலேயே 6 சதவீத வாக்குகளைப் பெற்றுத் தன் பலத்தை நிரூபித்தது. 1998 இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்த ராமதாஸ், போட்டியிட்ட 5 இடங்களில் 4இல் பாமகவை வெற்றிபெறச் செய்தார். தலித் எழில்மலை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சரானார்.1999 தேர்தலில் திமுக - பாஜக கூட்டணியில் இணைந்து 8 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி கண்டதுடன், பாமகவை சேர்ந்த 3 பேர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றனர்.
தேர்தல் அரசியலைத் தாண்டி தமிழ் மொழி மற்றும் தமிழர் உரிமைக்காக ராமதாஸ் ஆற்றிய பங்களிப்பு சிறப்புமிக்கது. பிற மொழி கலப்பற்ற நல்ல தமிழை வளர்க்கும் நோக்கில் கொங்கு தமிழ் அறக்கட்டளை, தமிழ் ஓசை நாளிதழ், மற்றும் மக்கள் தொலைக்காட்சி ஆகியவற்றைத் தொடங்கினார். சாதி ஒழிப்பு நடவடிக்கையாகத் தமிழகத்தில் பல இடங்களில் 100 அம்பேத்கர் சிலைகள் திறப்பு, சமச்சீர் கல்வி மற்றும் மது ஒழிப்புக்கான தொடர் போராட்டங்களை முன்னெடுத்தார். வடதமிழகத்தில் வன்னியர்கள் வசிக்கும் பகுதிகள் வழியாகத் தடையை மீறி பட்டியலினத்தவரின் சடலத்தை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வழிவகுத்தார். மொழிக்கும் மக்களுக்கும் அவர் ஆற்றிய தொண்டைக் கண்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனால் தமிழ்குடிதாங்கி என்றும் பாராட்டப்பட்டார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பசுமைத் தாயகம் இயக்கத்தைத் தொடங்கி பல முன்னெடுப்புகளைச் செய்தார்.தமிழக அரசியலில் புதிய முன்னுதாரணமாக, 2002-2003 நிதி ஆண்டு முதல் நிழல் நிதிநிலை அறிக்கையையும், 2008-2009 நிதி ஆண்டு முதல் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையையும் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். மேலும், கட்சியில் பட்டியலினத்தவரே பொதுச் செயலாளராக வர வேண்டும் என்ற முற்போக்கு விதியையும் தன் கட்சியில் நடைமுறைப்படுத்தினார். ஒவ்வொரு அரசியல் தலைவரைப் போலவே மருத்துவர் ராமதாசும் சில கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளார். திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணியே இல்லை என்று அறிவித்துவிட்டு, பின்னர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தமை. தன் குடும்பத்திலிருந்து யாரும் கட்சிப் பதவிக்கோ ஆட்சிப் பதவிக்கோ வரமாட்டார்கள் என்று முழங்கிவிட்டு, தன் மகன் அன்புமணி ராமதாஸை மத்திய அமைச்சராக்கியதும், கட்சியின் தலைவராக்கியதும் விமர்சனமானது.
வடதமிழகத்தில் நிகழ்ந்த சில சாதியக் கலவரங்களின் பின்னணியில் பாமக இருப்பதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் 2012-2014 காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து சமுதாயப் பேரமைப்பின் செயல்பாடுகள் ஆகியவை அவர் மீதான முக்கிய எதிர்மறை விமர்சனங்களாகும். பசுமைத் தாயகத்தில் 7 ஆண்டுகள் பணியாற்றி அரசியலுக்கு வந்த அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராகவும், பின்னர் கட்சித் தலைவராகவும் உயர்ந்தார். தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான அக மோதல்கள் மற்றும் அரசியல் மாறுதல்களுக்கு மத்தியில், தற்போது ராமதாஸ் அரசியல் துறவற நிலையை எட்டியுள்ளார். இருப்பினும், எந்த ஒரு வயதிலும் சோர்வடையாமல் தமிழைத் தேடிய பயணம் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் அறிக்கை வெளியிடுவது எனத் தன் வாழ்நாளின் இறுதிவரை சுறுசுறுப்பாக இயங்கிய டாக்டர் ராமதாஸ், 1990-களுக்குப் பிந்தைய தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் வரலாறாக நிலைபெற்றுள்ளார்.