தமிழ்நாடு

தனியார் பள்ளிவாகனம் கவிழ்ந்து விபத்து; பயிற்சி இல்லா ஓட்டுநர் வைத்து இயங்கியதுதான் காரணமா?

தனியார் பள்ளிவாகனம் கவிழ்ந்து விபத்து; பயிற்சி இல்லா ஓட்டுநர் வைத்து இயங்கியதுதான் காரணமா?

webteam

அரூர் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் தப்பினர்.

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே செயல்படும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாகனமானது, அரூர் பகுதியில் இருந்து பத்துக்கு மேற்பட்ட மாணவர்களை அழைத்துச் சென்றது. அப்பொழுது அரூர் அடுத்த அக்ராஹரம் பகுதியில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன், சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனைத்தொடர்ந்து பள்ளி வாகனத்தில் பயணம் செய்த மாணவர்கள், பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதில் ஒரு சில மாணவர்கள் லேசான காயம் அடைந்தனர். இருப்பினும் மாணவர்களுக்கு பெரிதளவில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் அனைவருமே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனை தொடர்ந்து வேறு வாகனம் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் உதவியுடன் பள்ளி வாகனம் மீட்கப்பட்டது.

இதனிடையே,  தொடர்ந்து கொரோனா காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், ஊதியம் வழங்க முடியாததால், ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநர்களை குறைவாக வைத்து, தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் முறையான ஓட்டுனர் பயிற்சி இல்லாதவர்களை கொண்டு பள்ளி வாகனங்கள் இயக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே வாகன போக்குவரத்து அலுவலர்கள் பள்ளி வாகனங்களை இயக்க, போதிய அனுபவம் மிக்கவர்களை கொண்டு வாகனங்கள் இயக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.