அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிநேக பிரியா ஐ.பி.எஸ், அய்மான் ஜமால் ஐ.பி.எஸ், பிருந்தா ஐ.பி.எஸ் ஆகிய அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியிடமும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நடத்தி விசாரணையில், “சார் ஒருவரிடம் ஞானசேகரன் தொடர்பு கொண்டார். அந்த சாருடன் இருக்குமாறு அவர் என்னிடம் கூறினார்” என பாதிக்கப்பட்ட மாணவி மீண்டும் உறுதிப்படுத்தியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், வழக்கின் தீவிரம் அதிகரித்த நிலையில் கைதுசெய்யப்பட்ட ஞானசேகரனின் வீட்டில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு இன்று சோதனையில் ஈடுபட்டது.
ஞானசேகரனின் கோட்டூர்புர வீட்டில், இன்று காலை சினேக பிரியா ஐபிஎஸ், அய்மான் ஜமால் ஐபிஎஸ், பிருந்தா ஐபிஎஸ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட சிறப்பு புலனாய்வு குழு சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 6.30 மணிநேரமாக நடத்தப்பட்ட சோதனை மற்றும் விசாரணையின் முடிவில் சிறப்பு புலனாய்வு குழுவினர் பெட்டி பெட்டியாக ஆவணங்களை எடுத்துச்சென்றனர்.
விசாரணை குறித்தும், ஆவணங்கள் குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு "Pls give Some time" என சொல்லிவிட்டு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
வழக்கின் போக்கை பொறுத்தவரையில் யார் அந்த சார்? என்ற கேள்வி மீண்டும் அழுத்தமாக எழுப்பப்பட்டிருக்கும் நிலையில், தற்போது பெட்டி பெட்டியாக ஆவணங்கள் சிக்கியிருப்பது விரைவில் வழக்கில் சில திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.