தெருநாய்கள், நாய்க்கடி, ரேபிஸ் போன்ற அச்சங்களும், எச்சரிக்கைகளும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. உச்ச நீதிமன்றம் தலையிடும் அளவுக்கு தீவிரமான விஷயமாகிவிட்டது நாய்க்கடி பிரச்சினை. இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சியிடம் இருந்து கிடைத்துள்ள ஒரு புள்ளிவிவரம் நாய்க்கடி மீதான அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ரேபிஸைத் தடுக்க, செல்லப் பிராணிகள் வளர்ப்போருக்குக் கட்டுப்பாடுகளை கட்டாயமாக்கியுள்ளது சென்னை மாநகராட்சி. செல்லப் பிராணிகளுக்கான உரிமம் கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 50 விழுக்காட்டை மாநகராட்சி அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். விண்ணப்பித்துள்ள உரிமையாளர்கள், தங்கள் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பு மருந்து செலுத்தவில்லை என்பதே நிராகரிப்புக்கு காரணம்.
கடந்த ஓராண்டில், அதாவது 2024 செப்டம்பர் 18ஆம் தேதி முதல், செல்லப் பிராணிகளுக்கான உரிமம் கோரி, 42,740 விண்ணப்பங்களை மாநகராட்சி பெற்றுள்ளது. இவற்றில், 24,862 விண்ணப்பங்களை மறுத்து, நிராகரித்துள்ளது. இதற்கு ரேபிஸ் தடுப்பூசி போடாதது மட்டுமே காரணம் என்கிறது சென்னை மாநகராட்சி நிர்வாகம். மேலும், 12,708 செல்லப்பிராணிகளுக்கே உரிமம் வழங்கியுள்ள மாநகராட்சி அதிகாரிகள், 5,170 விண்ணப்பங்களை பரிசீலனையில் வைத்துள்ளனர்.
எனவே, செல்லப்பிராணிகள் பிறந்து 3 மாதங்கள் ஆனதும் முதல் தடுப்பூசி போடவேண்டும். ஒரு வயது நிறைவடைந்ததும், அடுத்த தடுப்பூசி போட வேண்டும். அதன் பிறகு, ஆண்டுக்கு ஒருமுறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். ஒவ்வொரு தடுப்பூசியும் செல்லப்பிராணிகளுக்கான சுகாதார நல அட்டையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டிருந்தால் மட்டுமே, செல்லப்பிராணிகளை வளர்க்க உரிமம் அளிக்கிறது, சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம்.
செல்லப்பிராணிகளுக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டால், பின்பற்ற வேண்டிய அம்சங்களை கால்நடை மருத்துவர்கள் விவரிக்கிறார்கள். அதன்படி, 1913 என்ற எண்ணில் அழைக்க வேண்டும். உடனடியாக, அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று தடுப்பு மருந்து போட வேண்டியது கட்டாயம். காயத்தை புவிடோன் அல்லது ஆல்கஹால் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். டெடனஸ் தடுப்பூசி போட வேண்டும்.
செல்லப்பிராணிகளின் காயத்தில், நாட்டு மருத்துவம் முயற்சியாக, மஞ்சள், எண்ணெய் போன்றவற்றை போடக்கூடாது. நாயை, தொடர்ந்து 10 நாட்கள் தீவிரமாகவும் கவனமாகவும் கண்காணிக்க வேண்டும். இவற்றையெல்லாம் பின்பற்றினால் ரேபிஸ் பாதிப்பைத் தடுக்கலாம் என்கிறார்கள் கால்நடை மருத்துவர்கள்.