தவெக விஜய் - வைஷ்ணவி web
தமிழ்நாடு

”நடிகரோ, நாட்டை ஆளும் அதிபரோ.. யாராக இருந்தாலும்..” - தவெக தலைவர் விஜய் மீது திமுக வைஷ்ணவி புகார்!

தன்னை பற்றி சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் தவெகவினர் கருத்துக்களை பரப்புகிறார்கள் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்த வைஷ்ணவி, தவெக தலைவர் விஜய் மீதும் புகாரளித்துள்ளார்.

Rishan Vengai

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகம் கட்சியில் இருந்து வெளியேறிய இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி, செந்தில் பாலாஜி தலைமையில் திமுக-வில் இணைந்தார்.

அப்போது தவெக கட்சியிலிருந்து விலகி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த வைஷ்ணவி, “இந்தச் சமூகத்தில் மாற்றம் ஒன்று மலராதா என்றே எனது அரசியல் பயணத்தைத் தவெக-வில் தொடங்கினேன். ஆனால், தொடர்ந்து நிராகரிப்பை மட்டுமே சந்தித்து. கடந்த மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என் வளர்ச்சியைத் தடுப்பதாக நினைத்து கட்சியின் வளர்ச்சியை தடுக்கச் சிலர் செயல்படுகிறார்கள். கட்சியிலிருந்து என்னை விடுவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

மேலும் தவெகவிலிருந்து விலகிய பிறகு பேட்டியளித்த வைஷ்ணவி, தவெக இன்னொரு பிஜேபி என்று விமர்சித்தார்.

இந்நிலையில் தவெகவினர் தொடர்ந்து தன்னை ஆபாசமாக சித்தரித்து அவதூறு பரப்புவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் மீது புகார்..

திமுகவில் இணைந்த சமூக வலைதள பிரபலம் வைஷ்ணவி, இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் மீதும் தவெக தொண்டர்கள் மீதும் புகார் அளித்தார். 

புகார் அளித்தபிறகு பேசிய வைஷ்ணவி, தவெகவில் இருந்து வெளியேறியது முதல் என்னை பற்றி தவெகவினர் சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும் அவதூறாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இது சம்பந்தமாக தவெக தலைவர் விஜய் கண்டன அறிக்கை வெளியிடுவார் என்று நினைத்தேன், ஆனால் அப்படி எதுவுமே வெளியிடவில்லை, இதற்கு மேலும் வெளியிடுவார் என்ற நம்பிக்கை இல்லை எனவே விஜய் மீதும் தவெக தொண்டர்கள் மீது புகார் அளித்துள்ளேன்.

இப்படி ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துகள் பரப்பும்போது பெண்களுக்கு எப்படி அரசியல் களத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பெண்கள் கையிலிருந்து கரண்டியை பிடிங்கிட்டு புத்தகங்களை கொடுங்கனு பெரியார் சொன்னார், ஆனால் இவங்க மறுபடியும் பெண்கள் கையில் கரண்டியை கொடுக்கக்கூடிய நிலையை தான் தவெக தொண்டர்களும், தவெக தலைவரும் வலியுறுத்துறாரோ என்று தோன்றுகிறது என கூறினார்.

தவெக தலைவர் மீது புகாரளிக்கிறது எந்தவகையில் லாஜிக்கா இருக்கு என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த வைஷ்ணவி, “தவெகவில் இருக்கும் ஒவ்வொருவரும் எங்களுடைய வாரியர்கள் தான்னு சொன்ன தலைவர் ஏன் அறிக்கை வெளியிடக்கூடாது. நாங்கள் கருத்தியல் ரீதியான கேள்விகளை தவெகவினரிடம் முன்வைத்தாலும் கூட அவதூறான கருத்துக்கள் தான் கூறுகிறார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் வைஷ்ணவி, “எதற்கும் அஞ்ச மாட்டேன் பெண்களை கேலி செய்யும் இந்நிலை மாற வேண்டும். நடிகரோ அல்லது நாட்டை ஆளும் அதிபரோ யாராக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திப்போம்.” என பதிவிட்டுள்ளார்.