“TVK, இன்னொரு BJP” - தவெக-வில் இருந்து விலகிய இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி திமுக-வில் இணைந்தார்!
கோவையை சேர்ந்த சமூகவலைதள பிரபலமான வைஷ்ணவி திமுகவில் இணைந்தார். அண்மையில் தவெகவில் இருந்து விலகிய நிலையில் திமுகவில் இணைந்துள்ளார் வைஷ்ணவி. திமுகவில் இணைந்த பின்னர் பேட்டியளித்த அவர், “TVK, இன்னொரு BJP” என்று விமர்சித்துள்ளார்.
முன்னதாக, கட்சியில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இருந்து விலகுவதாக வைஷ்ணவி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “என் மனதை கல்லாக்கிக் கொண்டு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். குறுகிய காலத்தில் கட்சியில் பிரபலமானாலும், எனது நோக்கமும் லட்சியமும் ஒன்றேதான். இந்தச் சமூகத்தில் மாற்றம் ஒன்று மலராதா என்றே எனது அரசியல் பயணத்தைத் தவெக-வில் தொடங்கினேன். ஆனால், தொடர்ந்து நிராகரிப்பை மட்டுமே சந்தித்து. கடந்த மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என் வளர்ச்சியைத் தடுப்பதாக நினைத்து கட்சியின் வளர்ச்சியை தடுக்கச் சிலர் செயல்படுகிறார்கள். தொடர்ந்து நிராகரிக்கப்பட்டேன்.
சிறுவயதில் இருந்து நான் சிறுகச் சிறுக சேமித்த ரூ.5 லட்சம் பணத்தை மக்களுக்காகவும், குழந்தைகளுக்காவும் பல நலத்திட்ட உதவிகள் செய்து வந்தேன். ஆனால் கட்சியில் இருக்கும் சில நாசக்காரர்களின் சதியாலும் உயர்மட்ட நிர்வாகிகளின் போதிய ஒத்துழைப்பு இல்லாததாலும் எனது வார்டில் இருக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கொடுக்கக்கூட எனக்கு அனுமதி கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டேன்.
மாநில அளவில் கட்சிக்காக உழைக்கும் எனக்கு ‘பொதுக்குழு கூட்டம், பூத் கமிட்டி மாநாடு, செயற்குழு கூட்டம்’ என எதற்கும் அனுமதி கொடுக்காமல் நிராகரித்து, சென்னைக்குச் சென்று பொதுச் செயலாளரை சந்திக்கக் கூடாது, மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கும் வரக்கூடாது, பொதுச் செயலாளரை சந்திக்க மேடை ஏறினால் ‘மனிதச் சங்கிலியால் நுழையவிடாமல் கீழே தள்ளிவிட்டது’, மாவட்ட நிர்வாகிகளை மீறி கட்சியின் வளர்ச்சி குறித்து ஊடகங்களில் நேர்காணல் கொடுக்கக் கூடாது. சமூக வலைதளங்களில் நீங்கள் பேசக்கூடாது போஸ்ட் போடக் கூடாது, “உங்களுக்கு லைக் அதிகமாக வருகிறது எங்களுக்கு அது எரிச்சலைத் தருகிறது”, “மாவட்ட நிர்வாகிகளைத் தாண்டி நீங்கள் வேகமா வளர்கிறீர்கள், அது எங்களுக்கு உறுத்தலாக இருக்கிறது” என வெளிப்படையாகவே மிரட்டியது என தொடர்ந்து பல இடங்களுக்கு, கூட்டத்திற்கு நிராகரிக்கப்பட்டுக் கொண்டே இருந்தேன்.
இருப்பினும் எனக்கு எந்த பதவியும் வேண்டாம், கட்சியின் வளர்சிக்காக என்னை சுதந்திரமாக மக்களைச் சந்திக்க விடுங்கள் என்று மட்டும் தான் கோரிக்கை வைத்தேன். ஆனால் அதற்கும் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. “ஏன் என்னை நிராகரிக்கிறீர்கள்,” "நான் என்ன தவறு செய்தேன் என கண்ணீர் மல்க கேட்டபோது எனக்கு கிடைத்த பதில், “நீ கட்சி ஆரம்பித்த பிறகு தானே வந்தாய் என்ன அவசரம் போ..” என்று சொல்லி நிராகரித்தார்கள்.
ஒரு பெண் சமூக பிரச்சினையை கையில் எடுத்து போராட வீதிக்கு வந்தால் “நீயெல்லாம் ஒரு பொண்ணா? உனக்கெல்லாம் எதுக்கு அரசியல், ஒழுங்கா வீட்டுகுள்ளேயே இரு. உனக்கு என்ன தெரியும் அரசியலை பற்றி” என வசம்பு வார்த்தைகளால் நசுக்குபடுவது அனைவரும் அறிந்ததே.
என்னையும் அந்த வார்த்தைகள் விட்டுவைக்கவில்லை. என்னுடைய மக்கள் பணிக்கு ஒரு சிலர் முற்றுப் புள்ளி வைக்க நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது மக்களுக்கான சேவையை எந்த தளத்தில் இருந்தாலும் நான் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். இன்று முதல் நான் என்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து முழுமையாக விடுவித்துக் கொள்கிறேன், கட்சிக்கு உண்மையாக என்னுடன் பணியாற்றிய அனைத்துத் தொண்டர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று அவர் கூறியிருந்தார்.
வைஷ்ணவியின் இந்த பதிவு சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் தங்கள் கட்சிக்கு அழைப்பு விடுத்திருந்தார். வானதி ஸ்ரீனிவாசன் அழைப்பிற்கு பதில் அளித்த வைஷணவி, "என்னை போன்ற இளம் பெண்களும் இளைஞர்களும் அரசியல் களத்தில் மக்கள் குரலாக ஒலிக்க உங்களைப் போன்ற அனுபவம் மிக்கவர்களின் ஊக்கமும் வழிகாட்டுதலும் நிச்சயம் தேவை!! நிச்சயமாக எனது மக்கள் பணி தொடரும்..எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டிருக்கும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி… நன்றி சகோதரி" என்று பதில் அளித்து இருந்தார். அதனையடுத்து விரைவில் வைஷ்ணவி பாஜகவில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இத்தகைய சூழலில் தான், தவெக-வில் இருந்து விலகிய இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி, செந்தில் பாலாஜி தலைமையில் திமுக-வில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைஷ்ணவி, “தவெகவில் ஒரு வருடமாக பயணித்தேன். தவெக இளைஞர்களை வைத்து அரசியல் செய்வார்கள் என்று தான் என்னைப்போன்ற பல பெண்கள் இணைந்தோம். ஆனால் அதிருப்திதான் மிச்சம். இளைஞர்களுக்கான அரசியலை அவர்கள் சுத்தமாக முன்னெடுக்கவில்லை.
இன்றைய தினம் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளேன். தவெக பாஜகவின் இன்னொரு பிரிவுதான். என்னுடைய மக்கள் பணி திமுகவில் தொடரும்” என்றார்.