தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆளும் திமுக தேர்தலை சந்திக்கவிருக்கிறது. 1 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்த தொகுதிப்பங்கீடு நீண்ட இழுபறிக்குப் பிறகு, ஒரு வழியாக முடிந்திருக்கும் நிலையில், வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மட்டும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்கிறது. அதன்படி, காங்கிரசுக்கு 28 தொகுதிகள், தேமுதிகவுக்கு 10 தொகுதிகள், விசிக 8 தொகுதிகள், சிபிஎம், சிபிஐ-க்கு தலா 5 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொமதேக, மமக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு 2 தொகுதிகளும், எஸ்டிபிஐ, மஜக, கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதன்மூலம், தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 70 தொகுதிகளை ஒதுக்கியுள்ள திமுக, 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதேசமயம், கூட்டணிகட்சிகளின் 11 தொகுதிகள் உட்பட 175 இடங்களில் உதய சூரியன் சின்னம் களம் காண்கிறது. முன்னதாக 169 இடங்களில் போட்டியிடும் அதிமுக 2 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் பட்டியல் நேற்று (மார்ச் 27) அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி பிரிப்பதில் ஏற்பட்ட இழுபறியின் காரணமாக திமுக போட்டியிடவுள்ள தொகுதிகளை நேற்று அறிவிக்கவில்லை.
இந்த சூழலில் தான், இன்று திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுகான தொகுதிகளை திமுக பொருளாளார் டி.ஆர் பாலு இன்று வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, 164 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன்படி, திமுக முக்கிய வேட்பாளர் பட்டியல் குறித்துப் பார்க்கலாம், மதுரை மத்தி தொகுதியில், அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், போடிநாயக்கனூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், திருவாரூர் தொகுதியில் பூண்டி கலைவாணன், கோவை தெற்கில் செந்தில் பாலாஜி, திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ், திருவண்ணாமலை தொகுதியில் அமைச்சர் எ.வ வேலு, காட்பாடியில் துரைமுருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தொடர்ந்து, திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன், ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவு, தூத்துக்குடியில் கீதா ஜீவன், ஆலந்தூர் தொகுதியில் தாமோ. அன்பரசன், சைதாப்பட்டையில் மா. சுப்ரமணியன், ஆயிரம் விளக்கு தொகுதியில் எழிலன், துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
அதேபோல, தவெக தலைவர் விஜய் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் பெரம்பூர் தொகுதியில் திமுக சார்பில் ஆர்.டி.சேகர் போட்டியிடுகிறார். அதேபோல, எடப்பாடி தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமிக்கு எதிராக திமுக சார்பில் காசி போட்டியிடவுள்ளார்.
ஏற்கனவே, நாம் தமிழர் கட்சி, அதிமுக ஆகியவை வேட்பாளர் பட்டியலை அறிவித்திருந்த நிலையில், இன்று திமுகவின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, நாளை தவெகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவிருக்கிறது. இந்த சூழலில், 4 முனைப் போட்டி நிலவும் தமிழக தேர்தல்களம் சூடுபிடித்திருக்கிறது.