ஆர்.எஸ்.பாரதி - விஜய் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“நேற்று முளைத்தவரெல்லாம் திமுகவுக்கு சவால் விடுகிறார்..” - ஆர்.எஸ்.பாரதி!

“நேற்று முளைத்தவர்கள் எல்லாம் திமுகவுக்கு சவால் விடுகிறார்கள். அவரது (விஜய்) அப்பாவையும் நாங்கள்தான் அறிமுகம் செய்தோம். நாடாகமாடுவதில் திமுக கைதேர்ந்தவர்கள் என நேற்று முளைத்தவரெல்லாம் சொல்கிறார்” - ஆர்.எஸ்.பாரதி

மருதுபாண்டி.நா

நெல்லை திமுக பாளையங்கோட்டை பகுதி கழகம் சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டமானது பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நேற்று நடைபெற்றது.

ஆர்.எஸ்.பாரதி

இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி சிறப்பு அமைப்பாளராக கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

“4 ஆண்டுகளில் 40 ஆண்டுகால சாதனை”

தமிழகத்தில் ஆட்சி செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 4 ஆண்டுகளில் 40 ஆண்டுகால சாதனையை செய்து முடித்துள்ளார். மகளிருக்கு உரிமை தொகை உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை முதல்வர் கொண்டு வந்துள்ளார். தாய்மார்கள் நன்றி மறவாதவர்கள் என்ற அடிப்படையில் இந்த திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

“தாய்மார்களை மதித்து, ஆட்சி நடத்தியவர் கலைஞர்”

இதேபோல தாய்மார்களை மதித்து, உணர்ந்து ஆட்சி நடத்தியவர்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி. சொல்லப்போனால் முதன்முதலில் திமுக ஆட்சியில்தான் பெண் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். போலவே வாழ்நாள் முழுதும் பல தலைவர்களுக்கு மணிமண்டபம் கட்டியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சமாதி கட்டி கொடுத்தவரும் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் என்பதை மறக்ககூடாது.

ஆர்.எஸ்.பாரதி

“பரந்தூரில் விஜய் வியாபாரம் செய்துள்ளார்”

அப்படியிருக்கையில், பரந்தூர் விமான நிலைய பிரச்சனையில் ஒரு நடிகர் (தவெக தலைவர் விஜய்யை குறிப்பிட்டு) நாடகம் ஒன்றை ஆடினார். ‘ஸ்டாலின் வீட்டுக்காகவா விமான நிலையம் கேட்கிறார். உண்மையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு இடம் கொடுக்க மக்கள் தயாராக உள்ளனர். விமான நிலைய பிரச்னை குறித்து முன்பின் விசாரிக்காமல் விஜய் பேசுகிறார். பரந்தூரில் விஜய் வியாபாரம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பரந்தூர் பகுதியில் 443 பேர் வாக்களித்ததில் 51% திமுகவுக்குதான் விழுந்துள்ளது. இதன்மூலம், திமுகவை அப்பகுதி மக்கள் விரும்புகிறார்கள் என்றே அர்த்தம்.

நேற்று முளைத்தவர் எல்லாம் திமுகவுக்கு சவால் விடுகிறார். அவரது (விஜய்) அப்பாவையும் நாங்கள்தான் அறிமுகம் செய்தோம். நாடாகமாடுவதில் திமுக கைதேர்ந்தவர்கள் என சொல்கிறார். அவரும் ஒரு நடிகர் என்பதை மறக்கக்கூடாது. முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய வசனத்திற்கு, அவரது அப்பாதான் டைரக்ஷன் செய்து கொடுத்தார் என்பதை மறக்கக்கூடாது.

எம்.ஜி.ஆர் போல மு.க.ஸ்டாலின்

கடந்த காலங்களில் எம்.ஜி.ஆருக்கு ஏஜெண்டாக தேர்தலில் செயல்பட்டவன் நான். தமிழகம் முழுதும் கருணாநிதி உடன் பிரச்சாரம் செய்தவன் நான். எம்.ஜி.ஆர் பிரசாரத்திற்கு சாலையில் சென்றால் காலியாக இருக்கும். அவர் பிரசார இடத்திற்கு வந்துவிட்டால் புற்றீசல் போல் சாரை சாரையாக கூட்டம் வந்துவிடும். அப்படி, எம்.ஜி.ஆருக்கு வந்தது போல் இப்போது மு.க.ஸ்டாலினுக்கு கூட்டம் அதிகமாக வருகிறது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் வாரம் ஒரு முறை தமிழகத்தின் ஊர் ஊராக வந்து மோடி பொய்யாக பேசி சென்றார். ஆனாலும், திமுக-தான் தேர்தலில் வென்றது. சொல்லப்போனால் ஆண்கள் வாக்குகளை விட பெண்கள் வாக்குகள்தான் அதிகமாக திமுகவுக்கு வந்தது. அதேபோல பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் 100 க்கு 90 வாக்கு திமுகவுக்கு கிடைத்தது.

ஆர்.எஸ்.பாரதி

“வயிற்றெச்சலில் பேசுகிறார் எடப்பாடி”

இதையெல்லாம் அறிந்து, மக்களுக்கான ஆதரவை தாங்கி கொள்ளமுடியாமல் வயிற்றெச்சலில் எடப்பாடி, ‘பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை’ என பேசுகிறார். அதிமுக ஆட்சியில் டிஜிபியால் பெண் எஸ்பிக்கே பாதுகாப்பில்லாத நிலை இருந்தது. அதிமுக ஆட்சியில் பல மோசமான செயல்கள் நடந்தன. அதனை கிளறினால் நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) தாங்கமாட்டீர்கள்.

“சீமான் அதை மறக்ககூடாது”

தமிழகத்தின் இளைஞர்களை சீமான் ஏமாற்றுகிறார். சட்டபடி நாம் தமிழர் என்ற பெயரை அவர் பயன்படுத்தக்கூடாது. நாம் தமிழர் கட்சியை 1969 ல் சி.பா.ஆதித்தனார் திமுகவில் இணைத்துவிட்டார். சீமான் ஃபோர்ஜரியாக நாம் தமிழர் என்ற பெயரை பயன்படுத்துகிறார். நான் நீதிமன்றத்தை நாடினால் அந்த பெயரையே இனி சீமான் பயன்படுத்தமுடியாது.

பிரபாகரன் படத்தை ஒட்டிவைத்து சீமான் ஃபோர்ஜரி செய்து வருகிறார். விடுதலை புலிகள் பிரபாகரனின் சீடர்கள். அவர்களில் 48 பேரை ஜாமீன் மீதான வழக்கில் நான் ஆஜராகி காப்பாற்றிய கட்சி திமுக என்பதை சீமான் மறக்ககூடாது. பிரபாகரனையும் விடுதலை புலிகளையும் காப்பாற்றியது திமுக. மற்ற கட்சிகள் எல்லாம் பிரபாகரனை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். கலைஞரையோ பெரியாரையோ இனி சிமான் பேசினால்... ஒருவன் சாக துணிந்தால் உன் நிலைமை என்ன என்பதை யோசிக்க வேண்டும்” என்றார்.