மக்களவை எக்ஸ் தளம்
தமிழ்நாடு

நிறைவுபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் | நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் எழுப்பிய முக்கிய கேள்விகள்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 அமர்வுகளாக நடைபெற்றது. இத்தொடரில் வக்ஃப் சீர்திருத்த மசோதா உட்பட 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில், இக்கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளின் விவரம் வெளியாகி உள்ளது.

PT WEB

1. தமிழ்நாட்டில் மின்னணு உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை என்ன? - திமுக எம்.பி. பி. வில்சன் கேள்வி

தமிழ்நாட்டில் மின்னணு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் கடந்த மூன்று ஆண்டுகளில் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI Scheme) திட்டத்தின்கீழ் நாட்டில் நிறுவப்பட்ட மின்னணு உற்பத்தி அலகுகளின் விவரங்கள் கேட்டு திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் பி.எல்.ஐ திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்ட, வழங்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட மொத்த நிதி, தமிழ்நாட்டில் மின்னணு உற்பத்தியை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விவரங்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட மின்னணுவியல் உற்பத்தி தொகுதிகள் (EMC 2.0) திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ஏதேனும் மின்னணு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதா, அப்படியானால், அவற்றின் விவரங்கள் மற்றும் இடங்கள் யாவை எனவும் அவர் கேட்டுள்ளார்.

பி. வில்சன்

2. விவசாய பொருட்கள் ஏற்றுமதி ஆணையத்திற்கு குறைந்த நிதி ஒதுக்கீடு ஏன்? - திமுக எம்.பி. ஆர். கிரிராஜன் கேள்வி

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (APEDA) பட்ஜெட் பல ஆண்டுகளாக ₹80 கோடியில் தேக்கமடைந்து நிற்கிறது என்றும், காலியாக உள்ள பதினைந்திற்கும் மேற்பட்ட பதவிகள் நிரப்புவதற்காக ஒன்றிய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர். கிரிராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் அண்மையில் இந்த ஆணையம் புதிய பதவிகளை உருவாக்கி இருந்தால் அதன் விவரங்கள் மற்றும் ஆணையத்தை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் முன்மொழியும் திட்டங்கள் குறித்த விவரங்களையும் அவர் கேட்டுள்ளார்.

3. நூறு நாள் வேலை திட்ட நிதியை பயன்படுத்தாது ஏன்? திமுக எம்.பி. திருச்சி சிவா கேள்வி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS) மற்றும் பிரதமர் கிராமப்புற வீடு கட்டும் திட்டம் (PMAY-G) போன்ற முக்கிய கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களில் ஒதுக்கப்பட்ட நிதி குறைவாகப் பயன்படுத்தப்படுவதற்கான காரணங்கள் குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி. சிவா கேள்வி எழுப்பியுள்ளார். இந்த திறமையின்மையை நிவர்த்தி செய்ய செயல்படுத்தப்படும் குறிப்பிட்ட நடவடிக்கைகள் என்ன? சமீபத்திய நிதியாண்டின்படி, முக்கிய கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் செலவிடப்படாத நிலுவை தொகை மற்றும் மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் தாமதத்திற்கான முதன்மைக் காரணங்களை அடையாளம் காண அமைச்சகம் ஏதேனும் மதிப்பீடுகளை நடத்தியுள்ளதா என்றும் அவர் கேட்டுள்ளார்

திருச்சி சிவா

4. செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாடு மற்றும் போலிச் செய்திகள் தடுப்பு - திமுக எம்.பி. டாக்டர் கனிமொழி சோமு கோரிக்கை

நாட்டில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் விரிவான நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து ஒன்றிய அரசின் கவனத்திற்கு வந்திருப்பவை என்ன என திமுக மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப தொழில்துறையை ஒழுங்குபடுத்துவதற்கான முக்கிய புள்ளிகள் மற்றும் காலக்கெடுவுடன் கூடிய அவசரச் சட்டம் அல்லது மசோதாவை அறிமுகப்படுத்த அரசு உடனடியாக முன் வர வேண்டும் மற்றும் மார்ச் 15, 2024 அன்று வெளியிடப்பட்ட ஆலோசனையின் கீழ் நிறுவனங்கள் மீது அரசாங்கம் ஏதேனும் கட்டுப்பாடு விதித்திருந்தால் அதன் விவரங்கள் என்ன என அவர் கேட்டுள்ளார். அதேபோல் தனது இன்னொரு கேள்வியில் போலிச் செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்ன என கேட்டுள்ளார். போலிச் செய்திகள் ஒரு பெரிய பிரச்சனையாக மாறி பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. போலிச் செய்திகள் பரவுவதற்கு அவற்றின் பங்களிப்பை அளவிட டிஜிட்டல் தகவல்களைப் பரப்பும் முக்கிய செயலிகள்/செய்தி நிறுவனங்கள் குறித்து ஆய்வுகள் அவசியம். தவறான செய்திகள் பரவுவதைத் தடுக்காத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்க அரசாங்கம் திட்டமிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

5. பிரதமரின் அமெரிக்க, பிரான்ஸ் பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் என்ன? - வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் கேள்வி!

பிரதமர் மோடி அண்மையில் மேற்கொண்ட அமெரிக்க பயணங்களினால் ஏற்பட்டுள்ள விளைவுகளை வெளிவிவாகரத் துறை அமைச்சர் விளக்க வேண்டும் என திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமரின் அமெரிக்க பயணத்தின் போது F-35 போர் விமானங்கள் உள்ளிட்ட போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கு ஏதேனும் ஒப்பந்தங்கள் ஒன்றிய அரசால் கையெழுத்திடப்பட்டுள்ளனவா? அவ்வாறெனில் அதைப் பற்றிய விவரங்கள் என்ன? இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே எவ்வளவு ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன? இந்தியாவிற்கும் பிரான்ஸுக்கும் இடையில் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் 36 ரஃபேல் போர் விமானங்களும் பெறப்பட்டுவிட்டனவா? அது பற்றிய விவரங்களைப் பற்றி கதிர் ஆனந்த் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

கதிர் ஆனந்த்

6. உச்சநீதிமன்ற கிளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் - தேனி திமுக எம். பி. தங்க தமிழ்ச்செல்வன் கோரிக்கை!

உச்சநீதிமன்றத்தின் கிளை தமிழ்நாட்டில் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தேனி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். தென்னிந்திய மாநிலங்களின் நீண்ட கால கோரிக்கையான தமிழ்நாட்டில் உச்ச நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு அரசிடமிருந்தோ அல்லது வழக்கறிஞர் சமூகத்திடமிருந்தோ வேண்டுகோள்கள் ஒன்றிய அரசுக்கு வந்துள்ளதா? அப்படி வந்திருந்தால் அதுபற்றிய விவரங்கள் என்ன? இல்லையேனில் அதற்கான காரணங்களை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

7. பெண்கள் நடத்தும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்த நடவடிக்கை என்ன? - திமுக எம்.பி. எம். எம்.அப்துல்லா கேள்வி

கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்கள் நடத்தும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்த ஒன்றிய அரசு எடுத்துள்ள புதிய முயற்சிகள் குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் பெண்கள் நடத்தும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை, மாவட்ட வாரியாக வேண்டும் என்றும், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள இந்த பெண்கள் நடத்தும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு வணிக நடவடிக்கைகளை எளிதாக்குவதற்காக ஒன்றிய அரசு ஏதேனும் சிறப்பு வசதிகளை வழங்கியுள்ளதா என்றும் அவர் கேட்டுள்ளார்

எம். எம்.அப்துல்லா

8. குடும்பநல நீதிமன்றங்களின் செயல்பாட்டை வலுப்படுத்துக!காஞ்சிபுரம் திமுக எம்.பி ஜி. செல்வம் மற்றும் திருவண்ணாமலை திமுக எம்.பி சி.என்.அண்ணாதுரை கோரிக்கை

தமிழ்நாட்டில் செயல்ப்பாட்டில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களின் எண்ணிக்கை என்ன? இதுவரை இல்லாத பகுதிகளில் புதிய குடும்ப நல நீதிமன்றங்களை ஏற்படுத்தும் திட்டம் ஏதும் அரசிடம் இருக்கின்றதா? அப்படியிருந்தால் அதைபற்றிய விவரங்கள் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் வாரியாக எவ்வளவு? என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் கேள்வி! திருமணம், பராமரிப்பு போன்ற வழக்குகளை கையாள்வதில் குடும்பநல நீதிமன்றங்கள் பிரச்சனைகளை எதிர் கொள்வதை அரசு அறிந்துள்ளதா? உள்ளதென்றால் நீதிபதிகள் குறைபாடு, உள்கட்டமைப்பு குறைபாடுகள், நடைமுறை தாமதங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கி அந்த பிரச்சனைகளை பற்றிய விவரங்கள் என்ன? குடும்பநல நீதிமன்றங்களின் செயல்பாட்டை வலுப்படுத்த அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? என பல்வேறு கேள்விகளை இருவரும் எழுப்பியுள்ளார்கள்.

9. சரக்கு இரயில் போக்குவரத்தை அதிகப்படுத்த நடவடிக்கை என்ன! - மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி

சரக்குப் போக்குவரத்திற்கான விலை நிர்ணய அமைப்பு அல்லது முதல் மற்றும் கடைசி மைல் இணைப்பை மேம்படுத்தவும், சாலைப் போக்குவரத்தைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி. சிவா கேள்வி எழுப்பியுள்ளார். கொள்கலன் முனையங்களை அணுகுவதற்கும் காலியான கொள்கலன்களை மறுசீரமைப்பதற்கும் அதிக செலவை நிவர்த்தி செய்ய ஏற்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் என்ன? உள்நாட்டு மற்றும் EXIM கொள்கலன் அளவுகளில் நிலையான வளர்ச்சி இருந்தபோதிலும், இந்திய ரயில்வே கொள்கலன் போக்குவரத்தில் அதன் பங்கை அதிகரிப்பதைத் தடுக்கும் காரணிகள் என்ன? சரக்கு வருவாயால் பயணிகள் சேவைகளுக்கு அதிகரித்து வரும் குறுக்கு மானியத்தை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்? என்றும் அவர் கேட்டுள்ளார்.

திருச்சி சிவா

10. பேரிடரால் பாதிக்கப்பட்ட கிராமப்புற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதி - திமுக எம்.பி. எம். எம். அப்துல்லா கேள்வி

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஷியாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷன் (SPMRM) இன் கீழ் கிராமப்புற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட மொத்த நிதி எவ்வளவு என கேட்டு திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் SPMRM இன் கீழ் உருவாக்கப்பட்ட கிராமப்புற தொகுப்புகளின் எண்ணிக்கை என்ன என்றும், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில், குறிப்பாக சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், ஏதேனும் சவால்களை அரசாங்கம் கண்டறிந்துள்ளதா என்றும் அவர் கேட்டுள்ளார். மேலும் பேரிடர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டை விரைவுபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் தரவும் அவர் கோரியுள்ளார்.